வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் காணி தகராறை தொடர்ந்து, ஒருவர் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகள் தலையில் பலத்த காயத்துடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கும் அவரது அயல் வீட்டுக்காரருக்கும் கடந்த மூன்று மாதங்களாக காணிப் பிரச்சினை இருந்துள்ளது. வெளிநாட்டிலுள்ள ஒருவரின் காணியை பராமரிக்கும் சகோதரர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று அந்தக் காணியில் மற்றொருவர் உள்ளதாக அறிந்த சகோதரர்கள் இருவரும் அங்கு சென்று அவருடன் முரண்பட்டதுடன் கம்பியால் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளானவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார்
உயிரிழந்தவரின் மகளும் அயல் வீட்டுக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த தந்தையும், மகளும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அயல் வீட்டில் உள்ளவர்களின் முச்சக்கர வண்டி மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் அவர் மரணமடைந்துள்ளார். மகள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் இராசநாயகம் ரெஜியானந்தன் (49) என்பவரே மரணமடைந்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




