ஆப்கானின் காபூலில் சிக்கிய மக்களை ஏற்றிக் கொண்டு சென்ற உக்ரைன் நாட்டு விமானம் நடுவானில் ஆயுத மேந்திய தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது, அந்த விமானம் ஈரான் நோக்கி சென்றது என்ற தகவலை உக்ரைனின் உக்ரேனிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.
எனினும், துணை வெளியுறவு அமைச்சரே விமானம் கடத்தப்பட்டதாக முன்னதாக தெரிவித்திருந்தார்.
ரஷ்ய செய்தி நிறுவனம் TASS செவ்வாய்க்கிழமை, உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் யெவ்னி யெனினை மேற்கோள் காட்டி விமானம் “திருடப்பட்டது” என்று கூறியது.
“கடந்த ஞாயிறு, எங்கள் விமானம் மற்றவர்களால் கடத்தப்பட்டது. விமானம் நடைமுறையில் எங்களிடமிருந்து திருடப்பட்டது, அது உக்ரேனியர்களை ஏற்றுவதற்கு பதிலாக அடையாளம் தெரியாத பயணிகளுடன் ஈரானுக்குள் பறந்தது“ என
உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் யெவ்னி யெனின் கூறியதாக TASS தெரிவித்தது.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ இன்று செவ்வாய்க்கிழமை தெரிவிக்கையில், விமானம் கடத்தப்பட்ட செய்தியை மறுத்தார்.
எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் நாட்டில் நிறுத்தப்பட்டதாக ஈரானின் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
31 உக்ரேனியர்கள் உட்பட 83 பேருடன் ஒரு இராணுவ போக்குவரத்து விமானம் ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானிலிருந்து கியேவுக்கு வந்தது. 12 உக்ரேனிய இராணுவ வீரர்கள் நாடு திரும்பியதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார். இன்னும் 100 பேர் வெளியேறுவதற்காக ஆப்கானில் காத்திருக்கிறார்கள் என்றார்.