பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து ஐ.நா வின் யுனிசெப் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி குழந்தைகளுக்கான பருவநிலை அச்சுறுத்தல் குறியீட்டை யுனிசெப் அமைப்பு முதல் முறையாக வெளியிட்டுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் புயல்கள், வெப்பக்காற்றுகள் போன்றவற்றால் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் சுகாதாரம், கல்வி, பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 26-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 14-வது இடத்திலும், வங்காளதேசம் 15-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 25-வது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 51-வது இடத்திலும், இலங்கை 61-வது இடத்திலும், பூடான் 111-வது இடத்திலும் உள்ளன. இந்த 3 நாடுகளிலும் குழந்தைகளுக்கு குறைவான பாதிப்புகள் ஏற்படும்.
வெள்ளம், காற்று மாசுபாடு ஆகியவற்றால் ஏற்படும் சமூக, பொருளாதார விளைவுகளால் பெண்களும், குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள 33 நாடுகளில் இந்தியாவையும் யுனிசெப் சேர்த்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 60 கோடி இந்தியர்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வார்கள் என்றும், உலகின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக உயர்ந்தால் இந்தியாவில் வெள்ளப்பெருக்கு நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.
இதுதொடர்பாக யுனிசெப் அதிகாரிகள் கூறியதாவது
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் குழந்தைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கும், அந்த பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்த அறிக்கை உதவும். வறட்சி, வெள்ளம், காற்று மாசுபாடு போன்ற பேரிடர்கள் தெற்கு ஆசியாவில் உள்ள லட்சக்கணகான குழந்தைகளை வீடு இல்லாதவர்களாக மாற்றுவதோடு அவர்களின் பட்டினிக்கும் காரணமாக இருக்கும். கொரோனா தொற்று அந்த அச்சுறுத்தலை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. குழந்தைகளின் எதிர் காலத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.