தமிழில், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர், சமீபத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.
தொடர்ச்சியாக, மீரா மிதுனை கைது செய்த போலீசாரை பாராட்டி நடிகை சனம் ஷெட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு காவல்துறை மற்றும் சைபர் கிரைம் போலீசாரை நினைத்து பெருமைப்படுகிறேன். சில ஆண்டுகளில் சகித்துக் கொண்டிருந்த அத்தனை கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது ”என அவர் குறிப்பிட்டுள்ளார்.