பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்த போது, தீயில் எரிந்து உயிரிழந்த சிறுமி இஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதப்பட்ட வாக்கியத்தின் கையெழுத்து இஷாலினியுடையது தானா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி, கையெழுத்து ஆய்வாளருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜெயசூர்யா இன்று (04) உத்தரவிட்டார்.
உயிரிழந்த சிறுமியின் புத்தகங்கள் மற்றும் துணிகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடக் கோரி கொழும்பு தெற்கு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் இன்று (04) மனு தாக்கல் செய்தது. இதன்போதே, நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்தது.
சிறுமியின் பாடசாலை புத்தகங்களில் உள்ள கையெழுத்தையும், சிறுமி தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதப்பட்டிருந்த “en Savuku Karanam” என எழுதப்பட்டிருந்த வசனத்துடன் ஒப்பிட்டு, இரண்டும் ஒருவரால் எழுதப்பட்டதாக என நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுமியின் அறையில் கண்டெடுக்கப்பட்ட பல துணிகள் சிறுமியின் சொந்தமா என்பதை ஆராய்ந்து அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்க ஆய்வாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக பல தொலைபேசி நிறுவனங்களின் பதிவுகளைப் பெற வேண்டியிருப்பதால், பல தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர். நீதிமன்றம் அந்த உத்தரவகளை பிறப்பித்தது.