ராஜீவ் காந்தி கொலையில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு தொடர்பில்லை. ரெலோ அமைப்பின் சிறிகாந்தா, தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசனிற்கே அந்த கொலையில் தொடர்பிருந்தது. இந்த கொலையின் பின்னர் இருவருக்கும் சி.ஐ.ஏயினால் பெருமளவு பணம் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டது என புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுச்சாமி.
புலம்பெயர் தமிழ் மக்கள் சிலருடனான கிளப் ஹவுஸ் கலந்துரையாடல் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுப்ரமணியன் சுவாமியுடன் நான் மிக நெருக்கமாக இருந்தேன். அவரது வீட்டில் அடிக்கடி சந்திப்பேன். அந்தக்காலத்தில் சிறிகாந்தா, தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் ஆகியோர் அங்கு அடிக்கடி வருவார்கள். சுப்ரமணியன் சுவாமி எங்கு போனாலும் என்னை கூட்டிச் செல்வார். ஆனால் சிறிகாந்தா, சந்திரகாசனுடனான சந்திப்பிற்கு செல்லும் போது மட்டும், தவிர்த்து விட்டு, தனியாக செல்வார்.
ராஜீவ் கொலை நடப்பதற்கு முன்னர் இவர்கள் இருவரும் அடிக்கடி வந்து சுப்ரமணியன் சுவாமியுடன் இரகசியமாக பேசுவார்கள்.
ராஜீவ் கொலை நடப்பதற்கு முன்னர் ஒரு கூட்டத்தில் சுப்ரமணியன் சுவாமி பதற்றமாக இருந்தார். அவரிடம் சென்று என்ன பிரச்சனையென கேட்டேன், ஒரு பொலிஸ் நிலையத்தை குறிப்பிட்டு, அங்கு தனக்கு வேண்டிய ஒருவரை பொலிசார் பிடித்து விட்டனர், அவரை உடனடியாக வெளியே எடுத்து விட வேண்டுமென்றார்.
நான் அங்கு சென்று பார்த்த போது, சிறிகாந்தாவே கைதாகியிருந்தார். பொலிஸ் இன்ஸ்பெக்டருடன் பேசி, சிறிகாந்தாவை விடுவித்தேன். வெளியில் வந்த சிறிகாந்தா, நான் சரியான நேரத்திற்கு வந்ததாகவும், தன்னிடம் கைத்துப்பாக்கி இருந்ததாகவும், சற்று தாமதித்திருந்தால் பொலிசாரிடம் அது சிக்கி பிரச்சனையாகியிருக்கும் என்று சொன்னார்.
ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில் விடுதலைப் புலிகள் தொடர்புபட்டுள்ளதாக பலர் சொல்கிறார்கள். என்னுடைய சந்தேகம், சர்வதேச சதியில் என்.சிறிகாந்தாவும், தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசனுமே தொடர்புபட்டுள்ளார்கள் என்பதே.
ராஜீவ் கொலையின் பின்னர் சிறிகாந்தா நல்ல வசதி வாய்ப்புடன் தமிழகத்தில் வாழ்ந்தார். அவருக்கு அந்த பணம் எப்படி கிடைத்தது என்பதை யாரும் ஆராயவில்லை. ராஜீவ் கொல்லப்பட்ட பின்னர் சிறிகாந்தாவிற்கும், சந்திரகாசனிற்கும் பெருமளவு பணம் சர்வதேச சக்திகளால் வழங்கப்பட்டது என்றார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுச்சாமி, ராஜீவ் கொலை சர்வதேச சதி, அணிசேரா நாடுகளும், அரபு நாடுகளும் ராஜீவ் காந்தியை ஆதரித்ததால், அவர் பெரிய சக்தியாகி விடுவார் என்பதால் எதிர்நாடுகள் இந்த சதியில் ஈடுபட்டன, விடுதலைப் புலிகள் இதில் தொடர்புபட்டிருக்கவில்லை, அதில் சுப்பிரமணியன் சுவாமி தொடர்புபட்டுள்ளார் என நீண்டகாலமாக குறிப்பிட்டு வருகிறார். ராஜீவ் கொலை தொடர்பாக நிறுவப்பட்ட ஜெயின் கமிசன் முன்பாகவும், சுப்ரமணியன் சுவாமியில் சந்தேகம் தெரிவித்து சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




