சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்தை, பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கு உள்ள தடைகள் நீக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பௌத்த ஆலோசனை சபை, 11ஆவது தடவையாக நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடிய போதே, ஜனாதிபதி அவர்கள் இதுபற்றித் தெரிவித்தார்.
நாட்டின் எதிர்காலத்துக்காக மேற்கொள்ளப்படும் கொள்கை சார்ந்த தீர்மானங்களுக்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருவது, எதிர்காலத் தலைமுறைக்குச் செய்யப்படும் பாரிய அநீதியாகும்.
“கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகமானது, 40 வருட காலமாக நாட்டுக்குத் தேவையான பெரும் எண்ணிக்கையான கல்விமான்களை உருவாக்கியுள்ளது. உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளுடன் சித்தியடைகின்ற மாணவர்கள்கூட, கொத்தலாவல பல்கலைக்கழகத்தைத் தங்களது உயர்க் கல்விக்காகத் தெரிவு செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்” என்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உயர் கல்விக்காக தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம், நாடும் பெற்றோர்களும் இழக்க வேண்டி ஏற்படும் பாரிய தொகையைச் சேமிக்க வேண்டுமானால், உயர்ந்த தரம் வாய்ந்த இத்தகைய பல்கலைக்கழகங்கள் நாட்டில் உருவாக்கப்பட வேண்டியது அவசியம்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டு வருவதாக ஜனாதிபதிகுறிப்பிட்டார்.




