யூரோ கால்பந்து தொடரில் குரோஷியா, இங்கிலாந்து அணிகள் நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.
யூரோ கால்பந்து தொடரில் நேற்று ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் குரோஷியா – ஸ்கொட்லாந்து அணிகள் மோதின.
17வது நிமிடத்தில் குரோஷியா முதல் கோல் அடித்தது. கோல்கம்பத்துக்கு அருகே இவான் பெரிசிக் தலையால் தட்டிவிட்ட பந்தை அருமையாக கட்டுப்படுத்தி கோல் அடித்து அசத்தினார் நிகோலா விளாசிக். இதனால் குரோஷியா 1-0 என முன்னிலை பெற்றது.
சளைக்காமல் ஆடி, 42வது நிமிடத்தில் ஸ்கொட்லாந்து பதிலடி கொடுத்தது. அந்த அணி சார்பில் கலும் மெக்ரிகோர் கோல் அடித்திருந்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.
62வது நிமிடத்தில் மேட்டியோ கோவாசிக் உதவியுடன் பந்தை பெற்ற லூகா மோட்ரிக் இலக்கை நோக்கி துல்லியமாக உதைத்த பந்து கோல் வலையை துளைக்க குரோஷியா 2-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து 77வது நிமிடத்தில் லூகா மோட்ரிக் கோர்னரில் இருந்து அடித்த பந்தை இவான் பெரிசிக் தலையால் முட்டி கோல் அடிக்க குரோஷியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. குரோஷியா அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது.
குரோஷியா அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டிருந்த நிலையில் 2வது ஆட்டத்தை செக் குடியரசுக்கு எதிராக சமன் செய்திருந்தது. இதன் மூலம் 4 புள்ளிகளுடன் ‘டி’ பிரிவில் 2வது இடம் பிடித்து நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது குரோஷியா அணி.
லண்டன் நகரில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து – செக் குடியரசு அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் 12வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் கோல் அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் 7 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.
அதேவேளையில் 4 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த செக் குடியரசு அணியும் நொக்-அவுட் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது. இதே பிரிவில் 4 புள்ளிகள் பெற்ற போதிலும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் குரோஷியா 2வது இடம் பிடித்து நாக்-அவுட் சுற்றில் கால் பதித்திருந்தது.