போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் திரும்பியுள்ள நடிகை ராகினி த்விவேதி முதன்முறையாக இந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்துள்ளார்.
கன்னட திரையுலகையே உலுக்கிய போதை மருந்து சர்ச்சை புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தவர் நடிகை ராகினி த்விவேதி. கடந்தாண்டு போதைப் பொருள் விற்பனை செய்த மூன்று நபர்களை காவல்துறை கைத்து செய்து விசாரித்த போது, அவர்கள் கன்னட திரையுலகை சேர்ந்தவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்யும் தகவல் காவல்துறைக்கு கிடைத்தது.
இந்த விவகாரத்தில், திரைப்பட இயக்குனரும், பத்திரிகையாளருமான இந்திரஜித் லங்கேஷ் என்பவரிடம், மத்திய குற்றப்பிரிவு போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது கன்னட திரையுலக பிரபலங்கள், 15 பேருக்கு தொடர்பு போதைப் பொருள் விற்பனையில் தொடர்பு இருப்பதாக கூறிய இந்திரஜித், அவர்களின் விவரங்களை, போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார் நடிகை ராகினி த்விவேதி.
இந்நிலையில் ராகினி, போதை மருந்து வழக்குத் தொடர்பாக முதல் முறையாகப் பேட்டியளித்துள்ளார். கர்நாடகா விஜயபுரா பகுதியில் திருநங்கைகளுக்கான ரத்த தானம் மற்றும் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்ட அவர் முதன்முறையாக இது குறித்து பேசியுள்ளார். அதில், ‘நம் சமூகத்தில் பொதுவாக பெண்களைத்தான் எளிதில் குறிவைக்க முடியும். என் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா பெண்களுக்குமே இது நடக்கிறது. அதுவும் ஒரு பெண் வெற்றிகரமாக இருந்தால் அது இன்னும் அதிகமாகிறது, மோசமாகிறது.
என் விஷயத்தில் எல்லோருமே என்னைக் குறிவைத்து, எனக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் பகிர்ந்து ட்ரெண்ட் செய்தார்கள். ஆனால், எனக்கு அவர்களைப் பற்றி யார் என்னவென்று தெரியாத நிலையில், அவர்கள் என்னைப் பற்றி என்ன எழுதினால், பேசினால் எனக்கென்ன? நான் ஏன் அதுகுறித்து கவலைப்பட வேண்டும்?
இன்னும் என் நடிப்புக்காக மக்கள் என்னை விரும்புகிறார்கள். தொடர்ந்து எனக்கு உத்வேகம் தரும், என் வாழ்க்கையின் மோசமான கட்டத்தை மறக்கடிக்கச் செய்யும் ரசிகர்களும் உள்ளனர்’. அதனால் எனக்கு கவலையில்லை என்று ராகினி பேசியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை இந்த வருடம் மார்ச் மாதம் தாக்கல் செய்துள்ளனர் அதிகாரிகள். அதில் நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி உட்பட 25 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.