அமெரிக்காவின் எஃப்.பி.ஐ மற்றும் அவுஸ்திரேலியாவின் சமஷ்டி பொலிசார் (ஏ.எஃப்.பி) என்பன இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் 200 இற்கும் மேற்பட்ட போதைப்பொருள், பாதாள உலகக்குழு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடல் அமைப்பை சில வருடங்களாக கண்காணித்து நடத்தப்பட்ட உலகளாவிய பரந்த இந்த நடவடிக்கையில் 800 இற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கும் அமெரிக்க பெடரல் பீரோ ஒஃப் இன்வெஸ்டிகேஷனுக்கும் இடையிலான கூட்டு நடவடிக்கை 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. கிட்டத்தட்ட 3 வருடங்களிற்கு மேலாக நடந்த நடவடிக்கையை தொடர்ந்து, அவுஸ்திரேலியா, ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 800 இற்கும் அதிகமான குற்றவாளிகளை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ANOM என்ற செயலியை பயன்படுத்தி குற்றவாளிகள் தமக்கிடையிலான தொடர்பாடலை மேற்கொண்ள்ளனர். குறிப்பிடப்பட்ட கையடக்க தொலைபேசிகளில் மட்டுமே பயன்படுத்த முடிந்த ஒரு கருப்பு சந்தை தயாரிப்பு இந்த செயலி.
இதற்குள் நுழைந்த புலனாய்வாளர்கள் 3 வருடமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Ironside என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை மீட்டனர். மில்லியன் கணக்கான பவுண்ஸ் பணமும் மீட்கப்பட்டது.
ஒரு அவுஸ்திரேலிய பாதாள உலக நபர், தனது சகாக்களிடையே ANOM செயலியை பாதுகாப்பானதாக குறிப்பிட்டு, சகாக்களிடையே விநியோகித்த போது, புலனாய்வாளர்கள் அந்த வலையமைப்பிற்குள் ஊடுருவினர்.
கமரா, குரல் பதிவு வசதிகள் இல்லாததாலும், கணினிகளில் பயன்படுத்த முடிந்ததாலும், இந்த செயலி பாதுகாப்பானதென குற்றக்கும்பல் நம்பியிருந்தது.
சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பல்களின் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 224 பேர் திங்களன்று அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டனர்.104 துப்பாக்கிகளும், கிட்டத்தட்ட 24.6 மில்லியன் டாலர் பணமும் கைப்பற்றப்பட்டன.
35 பேரை தடுத்து வைத்திருப்பதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது 525 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, ஆனால் வரவிருக்கும் வாரங்களில் இன்னும் அதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படலாம்.
கைது செய்யப்பட்டவர்களில் நிஞ்ஜா வாரியர் 2017 போட்டியாளர் சோபியா காங் (33) என்பவரும் அடங்குவார்.