மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் நயன்தாராவின் ‘கூழாங்கல்’ படம் திரையிடப்பட உள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறது. நடிப்பில் பிசியாக இருக்கும் நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, புதிய திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இந்நிறுவனம் கூழாங்கல், நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது.
குறிப்பாக ரௌடி பிக்சர்ஸின் முதல் படமான ‘கூழாங்கல்’ திரைப்படத்திற்கு நாளுக்குநாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. குடிகார தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவுகளை பேசும் இப்படத்தை அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படம் அயர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு டைகர் பிரிவில் விருதை பெற்றுள்ளது.
இந்த நிலையில் மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் ‘கூழாங்கல்’ திரைப்படம் பங்கேற்க உள்ளது. மே 29ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் இப்படம் திரையிடப்பட உள்ளது. தங்களது நிறுவனத்தின் முதல் படமே சர்வதேச அளவில் விருதுகள் விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்