அரசினால் நாடுபூராகவும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் அரசின் தடுப்பூசி வழங்கப்படவுள்ள நிலையில், தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது
குறித்த கூட்டத்தில் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆளுநரின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்
கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர்-
யாழ்ப்பாண மாவட்டத்திலே தொற்று நிலைமை தீவிரமடையும் காரணத்தினால் நாங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்று அந்தக் கோரிக்கையை ஏற்று ஐம்பதாயிரம் தடுப்பூசிகளை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது இன்று மாலை கிடைக்கப் பெறலாம் .அல்லது நாளை காலை கிடைக்கப் பெறலாம்.
கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கு அமைய இதுவரை காலமும் எங்களுடைய மாவட்டத்திற்கு அதிகளவாக இனங்காணப்பட்ட பிரதேசத்திலேயே முதற்கட்டமாக தடுப்பூசிகளை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதிக கொரோனா இறப்புக்கள் இடம்பெற்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தெரிவுசெய்து அவர்களுக்கு முதல் அடிப்படையில் நாங்கள் தடுப்பூசிகளை வழங்க உள்ளோம். முதலில் அந்த கிராம சேவையாளர் பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசிகளை வழங்க உள்ளோம். இந்தத் திட்டமானது நாடளாவிய ரீதியில் இதே ஒழுங்கில் நடைபெறுகின்றது. யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் இதே ஒழுங்கில் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது.
யாழ் மாவட்டத்தில் சுமார் 12 அல்லது 13 மத்திய நிலையங்களில் இந்தத் தடுப்பூசிகளின் நாங்கள் வழங்க உள்ளோம். சுகாதார தொண்டர் அல்லாத முன்கள பணியாளர்களுக்கு அடுத்த கட்டமாக தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளோம். ஆனால் நாங்கள் உடனடியாக அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளோம். இரண்டாம் கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக அதிகமாக தொற்று காணப்பட்ட அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அந்த இடத்துக்கு வழங்கப்படுகின்றது. இந்த தடுப்பூசி வழங்குவது தொடர்பான தகவல்களை நாங்கள் குறித்த பிரதேசத்தில் உரிய சுகாதார பணியாளர்களுக்கு வழங்கியுள்ளோம். அதேபோல் பிரதேச செயலாளர்கள் கிராம உத்தியோகத்தர்கள் உதவி புரிவார்கள். மக்கள் அவர்களுக்கு என குறித்து ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.