கிரீஸ் நாட்டின் தெற்கு பகுதியில் பெலொபென்னீஸ் தீபகற்பம் அமைந்துள்ளது. அங்குள்ள கோரிந்த் வளைகுடா பகுதி காடுகள் அடர்ந்த பகுதி ஆகும். அந்த காட்டுப் பகுதியில் நேற்று இரவு பயங்கர காட்டுத்தீ பரவியது.
கிரேக்க தலைநகர் ஏதென்ஸ், இந்த பகுதியில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. வேகமாக வீசிய காற்றுடன் சேர்ந்த இந்த காட்டுத்தீயானது கோரிந்த் பகுதியில் இருந்து மேற்கு அட்டிகா பகுதியில் உள்ள காடுகள் வரை பரவியது. தீ பரவிய இடங்களுக்கு அருகில் இருக்கும் 6 கிராமங்கள், 2 பாடசாலைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து அனைத்து மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த காட்டுத்தீ காரணமாக ஏற்பட்ட புகை மண்டலம் ஏதென்ஸ் நகர் வரை பரவியுள்ளது.
பல கடற்கரை ரிசார்ட்டுகளும், சுற்றுலா விடுதிகளும் இந்த தீக்கிரையாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும் அனைவரும் வெளியேற்றப்பட்டதால், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் 180 தீயணைப்பு வீரர்கள், 62 தீயணைப்பு வண்டிகள், 17 விமானங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.