ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளது.
வருகிற ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதற்கான ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய வீரர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் டி20 உலகக் கோப்பை துவங்கவுள்ளது. இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. உலகக் கோப்பை துவங்குவதற்கு முன்பு இரண்டு மூன்று சுற்றுப் பயணங்களில் பங்கேற்று தங்கள் அணியின் பலவீனத்தைச் சரி செய்ய அனைத்து அணிகளும் முயற்சித்து வருகின்றன. அதனடிப்படையில் ஆஸ்திரேலிய அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணத்திற்குத் தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கதேச அணியுடன் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும்.
உலகக் கோப்பை நெருங்கி வருவதால் அதற்கு அணியைத் தயார் செய்யும் நோக்கில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வீரர்களைத் தேர்வு செய்துள்ளது. ஆனால், முக்கிய பேட்ஸ்மேனான மார்னஸ் லபுஷேனை தேர்வு செய்யவில்லை. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், லபுஷேன் தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வருகிறார். அவர் அத்தொடரிலிருந்து விலகி ஆஸ்திரேலிய அணியில் இணைவது கடினம். அந்த அளவிற்கு மருத்துவப் பாதுகாப்பு வட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக ஆரோன் பிஞ்ச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் இடம்பெறாத ஜோஸ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்ஸ், அலேக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஸ்டீவன் ஸ்மித் போன்றவர்களுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ரிலே மெரிடித், ஜோஷ் பிலிப், ஜெய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், தன்வீர் சாங், டி’ஆர்சி ஷார்ட், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் ஸ்வெப்சன், ஆண்ட்ரூ டை, மத்தேயு வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.