தமிழ் சினிமாவில் வரும் வாகன சேஸிங் காட்சிகளை ஒத்த சம்பவமொன்றின் பின்னர், கண்காணிப்பாளர்களின் கண்களில் மண்ணை தூவி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குள் நுழைந்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்து நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, முள்ளிவாய்க்கால் பொதுத்தூபியில் அனுட்டிக்க விடுவதில்லையென்ற முடிவை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, பாதுகாப்பு தரப்பினர் அதை தடுக்கும் முழுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை முதல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற பகுதியில் நூற்றுக்கணக்கான படையினர், புலனாய்வாளர்கள், பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற பகுதிக்குள் யாரும் நுழைய முடியாதபடி கண்காணிப்பு இறுக்கமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று எம்.கே.சிவாஜிலிங்கம் அந்த பகுதிக்கு சென்ற போது, புலனாய்வாளர்கள் அவரது வாகனத்தை பின்தொடர்ந்தனர். இரு தரப்பும் அந்த பகுதிக்குள் சிறிது நேரம் ஓட்டம் காட்டிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகை உள்ள இடத்தில் சிவாஜிலிங்கம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார். அவரை இராணுவமும், புலனாய்வாளர்களும் சூழ்ந்து கொண்டனர்.
பின்னர் சிவாஜிலிங்கம் அங்கிருந்து புறப்பட்டார். அவரை புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்தனர். கண்காணிப்பாளர்களின் கண்ணில் மண்ணை தூவிய சிவாஜி, நினைவு முற்றத்தின் பின்பகுதியினால் திடீரென நுழைந்துள்ளார். அவர் நினைவு முற்றத்திற்கு வந்து அஞ்சலி செலுத்த ஆரம்பித்த பின்னர், விடயத்தை அறிந்த இராணுவத்தினர் அங்கு வந்தனர்.
எனினும், திட்டமிட்டபடி அஞ்சலி செலுத்திய பினனர் சிவாஜி புறப்பட்டார்.
