கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் அழிவை ஏற்படுத்தியதால் இந்தியா கடும் நெருக்கடியில் உள்ளது. இதன் விளைவாக, நாடு சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றுகளைப் பதிவு செய்து வருகிறது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து தினசரி சுமார் 4,000 எனும் அளவில் உள்ளது.
இது தான் சமயம் எனக் காத்திருந்ததைப் போல், பல சர்வதேச ஊடகங்களும், இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில், மிக மோசமாக செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இந்தியா கடந்து வரும் சோதனை நேரங்களில் இவ்வாறு மோசமாக சித்தரிக்கும் சர்வதேச ஊடகங்களின் நடவடிக்கையால் தனது இதயத்தில் ரத்தம் கசிவதாக, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் இந்தியா குறித்து ஒரு உணர்ச்சிபூர்வமான குறிப்பை தனது வலைப்பதிவில் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கருத்துக்கள் பின்வருமாறு :-
“முன்னர் பார்த்திராதபடி, இந்தியா கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளின் இன்னலுக்கு நடுவே உள்ளது. வைரஸின் அபாயகரமான பரவலை எதிர்த்துப் போராடுகையில், 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், எந்தவொரு பொதுத் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கே மிகப் பெரும்சவாலாக அதன் மக்கள் தொகையே இருக்கும் சூழலில், சர்வதேச ஊடகங்கள் இந்தியாவை ஒரே தராசில் வைத்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
நான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இந்தியாவுக்கு சென்று வருகிறேன். இந்தியாவில் நாடு முழுவதும் பயணம் செய்துள்ளேன். குறிப்பாக தமிழ்நாட்டை எனது ஆன்மீக இல்லமாக கருதுகிறேன். இதுபோன்ற மாறுபட்ட மற்றும் பரந்த நாட்டை நடத்துவதற்கான பணியை கொண்டுள்ள தலைவர்கள் மற்றும் பொது அதிகாரிகள் மீது எனக்கு எப்போதும் உயர்ந்த மரியாதை உண்டு.
நான் எங்கு சென்றாலும், மக்கள் என்னை அன்புடனும் பாசத்துடனும் வரவேற்றனர். அதற்காக நான் என்றும் அவர்களுக்கு கடன்பட்டிருப்பேன். பல ஆண்டுகளாக நான் இந்தியாவை நெருங்கிப் பார்த்தேன் என்று பெருமையுடன் கூறலாம், அதனால்தான் இந்த நேரத்தில் இந்தியா, அதன் மக்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற சவால்கள் குறித்து எதுவும் புரியாதவர்கள் ஊடகங்கள் மூலமாக தவறாக பேசுவதைப் பார்க்கும்போது என் இதயத்தில் ரத்தம் கசிகிறது.
ஒரு கிரிக்கெட் வீரர் மற்றும் விளையாட்டின் காதலன் என்ற முறையில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்காக இந்தியாவுக்கு வர அனுமதித்த விளையாட்டோடு எனது தொடர்பை நான் பராமரித்து வருகிறேன். எனது சக நாட்டு மக்களும் பல ஆண்டுகளாக ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வருகிறார்கள். இந்த சூழலில், உலகம் இந்தியா மீது தனது கதவுகளை மூடிக்கொண்டு, இந்திய அரசாங்கத்தை இழிவுபடுத்தும் ஒரு நேரத்தில், இந்தியாவில் இருக்கும்போது என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் அமர்ந்து இந்தியாவை விமர்சிப்பவர்களுக்கு இது ஒரு பார்வையைக் கொடுக்கும்.
எனக்கு தரவுகள் குறித்துத் தெரியாது. ஆனால் சில ஊடகங்களில் இருந்து வரும் தரவுகள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின. ஆஸ்திரேலியாவை விட ஐந்து மடங்கு அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா அதற்குள் 16 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டது. இந்தியா ஒவ்வொரு நாளும் 13 லட்சம் பரிசோதனைகளை செய்து வருகிறது. நான் சொல்லவருவது என்னவென்றால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையையும், அது தொடர்பான சவாலையும் யாரும் புறக்கணிக்கக் கூடாது என்பது தான்.
இந்தியா குறித்து ஒருவர் யோசிக்கும்போது, அற்புதம் என்ற ஒரே விஷயம் தான் மனதில் தோன்றும். இந்திய சுற்றுலாத்துறையும் “அற்புத இந்தியா” என்ற வாக்கியத்தைத் தான் பிரபலப்படுத்தி வருகிறது. இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும், பண்டைய நாகரீகத்தைக் கொண்ட இந்தியாவை பற்றிய எனது எண்ணம் மாறவில்லை.
தற்போதைக்கு மனித நேயம் மிகுந்த இந்த சமூகம் தொற்றுநோயால் தடுமாறியுள்ளது. பல்வேறு ஆன்மீக திருவிழாக்கள், பிரமாண்ட திருமண விழாக்கள், சாலையோர வியாபாரிகள், கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் நிறைந்த வீதிகளை இந்த சூழ்நிலை மாற்றிவிட்டது. ஆஸ்திரேலியா அரசின் பயணக் கொள்கை போல அனைத்தும் தற்காலிகமாக முடங்கியுள்ளது.
இந்தியா ஒரு வளமான நாகரீகம் கொண்ட நாடு. அதற்கு நிகராக உலகில் வெகு சில நாகரீகங்களே உள்ளன. அத்தகைய இந்தியா பிரச்சினையில் இருக்கும்போது, ஒரே தராசில் வைத்து எடை போடாமல், அதன் பரந்துபட்ட கலாச்சார, மொழி, மனித வளர்ச்சி உள்ளிட்ட மற்ற நுணுக்கமான விஷயங்களை பாராட்டுவதே நம்மால் முடிந்த குறைந்தபட்ச உதவி.”
இவ்வாறு மேத்யூ ஹைடன் தனது வலைப்பதிவில் கூறியுள்ளார்.
மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவும் இந்தியாவுக்கான ஹைடனின் உணர்ச்சிபூர்வமான பதிவை ட்விட்டரில் பகிர்ந்து இந்தியா மீதான ஹைடனின் பாசத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.