மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு, கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மத மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு மேற்குவங்கத்தில் அனுமதி அளித்துள்ளார். இருப்பினும், அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கூட்டமாக கூட அனுமதிப்பதாக அறிவித்துள்ளார்.
எனினும், வழக்கமாக கொல்கத்தாவின் ரெட் ரோட்டில் ரம்ஜான் ஈத் பிரார்த்தனை மற்றும் கூட்டம், இந்த ஆண்டு கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு மத்தியில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 2’ம் தேதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நேராக மூன்றாவது முறையாக பதவியேற்ற முதல்வர், இந்த நிகழ்வில் பெரிய கூட்டங்கள் எதுவும் நடத்தப்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
“இந்த கொரோனா சூழ்நிலையில், அதிகபட்சமாக 50 பேருடன் மத மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நாங்கள் அனுமதித்துள்ளோம். முஸ்லீம் தலைவர்கள் தீர்மானித்தபடி ரெட் ரோட்டில் ஈத் பிரார்த்தனைகள் மற்றும் கூட்டங்கள் இருக்காது. பெரிய கூட்டங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன். வீட்டிலிருந்தே பண்டிகையைக் கொண்டாடுங்கள்.” என்று மம்தா பானர்ஜி கூறினார்.
மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், மொத்தமாக ஊரடங்கு விதிக்கப்படுவது மக்களின் வாழ்வாதாரத்திற்கு இடையூறாக அமையும் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.
“நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், மொத்தமாக ஊரடங்கு விதிப்பது மக்களின் வாழ்வாதாரத்திற்கு இடையூறாக அமையும்” என்று மம்தா பானர்ஜி தனது புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து மாநில செயலகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார்.
அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வசதி செய்ய வேண்டும் என்றும் அவர் மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.