இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் கட்டுப்பாட்டு தேசிய பணிக்குழுவின் பல உறுப்பினர்கள் வைரஸ் பரவும் சங்கிலியை உடைக்க தேசிய ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.
எய்ம்ஸ் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உள்ளிட்ட நாட்டின் முன்னணி சுகாதார நிறுவனங்களின் உறுப்பினர்களைக் கொண்ட இந்த பணிக்குழு, அண்மையில், முன்னோடியில்லாத வகையில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பது குறித்து விவாதித்து வருகிறது.
இந்த கலந்துரையாடல்களில், பணிக்குழுவின் சில உறுப்பினர்கள் புழக்கத்தில் உள்ள இரட்டை மாறுபாடு கொண்ட புதிய வகை கொரோனா, மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். இது முழு சுகாதார உள்கட்டமைப்பையும் அச்சுறுத்தும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நாட்டில் கொரோனா மேலாண்மை திட்டத்தை மேற்பார்வையிடும் குழுவான தடுப்பூசி குறித்த தேசிய நிபுணர் குழு என்ற பணிக்குழுவின் தலைவர் டாக்டர் வி.கே.பால் தேசிய ஊரடங்கு குறித்து நடத்தப்பட்ட விவாதங்களும், அதைத் தொடர்ந்து தயாரித்த பரிந்துரைகளையும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிக்கையாக சமர்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 20’ஆம் தேதி பிரதமர் தனது கடைசி தேசிய உரையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயைச் சமாளிப்பதற்கான கடைசி வாய்ப்பாக மட்டுமே ஊரடங்கு இருக்கும் என்று வர்ணித்த போதிலும், கொரோனா பாதிப்புகளின் பயங்கர அதிகரிப்பிற்கு பிறகு ஒரு தேசிய அளவிலான ஊரடங்கிற்கு அழைப்புகள் அதிகரித்துள்ளன.
விஷயங்களை முன்னோக்கிப் பார்க்க, முதல் அலைகளின் போது இந்தியாவின் மிக உயர்ந்த ஒற்றை நாள் அதிகரிப்பைக் கடந்த ஆண்டு செப்டம்பரில் சுமார் 97,000 கொரோனா பாதிப்புகளுடன் இந்தியா கண்டிருந்தது. அதன் பின்னர் நேற்று, இரண்டாவது அலையின் போது, இந்தியாவின் தினசரி புதிய பாதிப்புகள் 4 லட்சத்தை தாண்டியது. இது தொற்றுநோய்களில் எந்தவொரு நாடும் இவ்வளவு பெரிய பாதிப்புகளை தினசரி அடிப்படையில் பதிவு செய்ததில்லை.
தினசரி இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இப்போது நாடு 24 மணி நேரத்திற்குள் கிட்டத்தட்ட 3,500 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
“கொரோனா பணிக்குழு கடந்த சில வாரங்களாக இதை மிகவும் ஆக்ரோஷமாக சொல்ல முயற்சிக்கிறது. நாம் ஒரு நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று மேலே உள்ளவர்களிடம் சொல்ல வேண்டும். இது எல்லா இடங்களிலும் பரவி வருகிறது என்ற எளிமையான உண்மையின் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அவசியம்.” என்று ஒரு உறுப்பினர் அந்த அறிக்கையில் மேற்கோளிட்டுள்ளார்.
வைரஸின் பரவலைச் சரிபார்த்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஒரே ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிவியல் கருவி ஊரடங்கு மட்டுமே என்று மற்றொரு உறுப்பினர் கூறினார்.
ஐந்து மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில், தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பின்னர் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசாங்க வட்டாரங்களில் பேசப்படுகிறது.