குறிப்பிட்ட பதிவுகளை நீக்காததால் ருவிற்றர் நிர்வாகத்துக்கு ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
ரஷ்யாவில் சுமார் 90 இலட்சம் பேர் ருவிற்றரை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அந்த நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புதினை விமர்சிப்பவர்கள், ருவிற்றரில் அரசுக்கு எதிரான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இதற்கு ரஷ்ய ஊடக கட்டுப்பாட்டு அமைப்பான ரேஸ்காமோசர் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நாவால்னி, நிதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரது தலைமுடி மழிக்கப்பட்டது.
இந்த புகைப்படம் ருவிற்றரில் வெளியாகி ரஷ்ய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாவால்னியின் புகைப்படம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் போராட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என்று ரஷ்ய ஊடக கட்டுப்பாட்டு அமைப்பான ரேஸ்காமோசர், ருவிற்றர் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அதோடு, ருவிற்றர் சமூக வலைதளத்தின் பயன்பாட்டை குறைக்க அந்த இணையத்தின் வேகம் குறைக்கப்பட்டது. மேலும் சிறார் ஆபாச புகைப்படம், வீடியோ, போதைபொருள் பயன்பாடு மற்றும் தற்கொலையை தூண்டும் பதிவுகளை ருவிற்றர் நீக்கவில்லை என்றும் அரசு தரப்பில் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு
இதுதொடர்பாக தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள டெகான்ஸி மாவட்ட நீதிமன்றத்தில் ரேஸ்காமோசர் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இளம் வயதினரை போராட்டத்துக்கு தூண்டும் வகையிலும், சமூகவிரோத செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும் ருவிற்றரில் பதிவுகள் வெளியாகி வருகின்றன என்று ரேஸ்காமோசர் குற்றம் சாட்டியது.
“கருத்து சுதந்திரத்தை தடுக்க ரஷ்ய அரசு தரப்பு முயற்சி செய்கிறது” என்று ருவிற்றர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், 3 பிரிவுகளில் ருவிற்றர் நிர்வாகத்துக்கு ரூ.85.63 இலட்சம் அபராதம் விதித்தது.
பேஸ்புக் மற்றும் கூகுள் நிர்வாகத்துக்கு எதிராகவும் இதே நீதிமன்றத்தில் ரேஸ்காமோசர் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்குகளின் விசாரணை மே மாதத்துக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது.
சமூக ஊடக கட்டுப்பாடு
அமெரிக்க சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் ரஷ்ய அரசு சார்பில் கடந்த ஆண்டு பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி ரஷ்யர்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு சேர்வர்களில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.