வடமாகாணசபை தேர்தலில் தமிழ் கட்சிகளின் பொதுவேட்பாளராக, தற்போதைய யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனை களமிறக்கலாமென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் விரும்புவதாக அறிய முடிகிறது.
மாவை சேனாதிராசாவை பொதுவேட்பாளராக்கலாமென தமிழ் மக்கள் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்புக்கள், விக்னேஸ்வரனிடம் யோசனை தெரிவித்த போது, அதற்கு மாறாக வி.மணிவண்ணனை களமிறக்கும் யோசனையை தெரிவித்துள்ளார்.
தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து எதிர்வரும் மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்ற அபிப்பிராயம் தமிழ் தேசிய பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளிடம் அண்மைநாட்களாக தீவிரமாக உணரப்பட்டுள்ளது
இதை முன்னிட்டு, பல்வேறு முன்னோடி சந்திப்புக்கள் நடந்தன. எனினும், இது எதுவும் சொல்லும்படி வெற்றிபெறவில்லை. இந்த முயற்சிகளிற்கு முட்டுக்கட்டை போட பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சுதந்திரதினத்தில் போராட்டமொன்றை செய்ய இந்த கட்சிகள் தயாரான போது, அதை செயலற்றதாக்குவதற்காக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி அவசரஅவசரமாக மேற்கொள்ளப்பட்டது.
அதன்திட்டமிடலில் தான் செயற்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவை, கொழும்பு மைய தமிழ் தேசிய தலைவர்கள் விரும்பவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இந்த கூட்டை அடியோடு விரும்பவில்லை. பின்னர், விக்னேஸ்வரனில் மனமாற்றம் ஏற்பட்டு கூட்டுடண் இணைந்து செயற்பட்டார். எனினும், சந்திப்புக்களில் கலந்து கொள்ளவில்லை. எனினும், மாவை சேனாதிராசா பொதுவேட்பாளராக இருக்கக்கூடாது என கருதுகிறார்.
விக்னேஸ்வரனின் கூட்டணியிலுள்ள சிவாஜிலிங்கம் தரப்பு, ஈபிஆர்.எவ்.எவ் தரப்புக்கள் மாவை சேனாதிராசாவை களமிறக்கலாமென விரும்புகின்றன. இதுகுறித்து விக்னேஸ்வரனை சந்தித்து அண்மையில் பேசியுமுள்ளனர்.
எனினும் விக்னேஸ்வரன் இதுவரை அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. மாறாக, மாவைக்கு பதிலாக மணிவண்ணனை களமிறக்கலாமென்ற யோசனையை விக்னேஸ்வரன் தெரிவித்து வருகிறார்.