தாவர அடிப்படையிலான சைவ கோழிக்கறி உணவுகள் சிங்கப்பூரின் 11 உணவு நிறுவனங்களில் வரும் 18ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளன.
‘நெக்ஸ்ட் ஜென் ஃபூட்ஸ்’ நிறுவனம் ‘டிண்டல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள சைவ கோழிக் கறியை விற்பனைக்குக் கொண்டு வருகிறது.
அந்த நிறுவனம் தயாரித்த ‘டிண்டல் தை’ எனும் சைவ கோழிக்கறி தண்ணீர், சோயா, தேங்காய்க் கொழுப்பு, சூரியகாந்தி எண்ணெய் உட்பட 9 பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது.
‘லிபி’ எனப்படும் அந்த நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்பான தாவர அடிப்படையிலான கொழுப்புகள் மற்றும் வாசனைப் பொருளும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.
சுகாதார மேம்பாட்டு வாரியத்தால் ‘ஆரோக்கியமான தெரிவு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த கோழிக்கறியில் ‘அன்டிபயோட்டிக்’, ‘ஹார்மோன்’ போன்றவை இல்லை. இதில் பூரித கொழுப்பின் அளவும் சோடியத்தின் அளவும் குறைவு.




