கனடாவின் ஒன்ராறியோ மாகாண முதல்வருக்கு பணம் கொடுத்து மாகாணசபையில் தமிழ் இனப்படுகொலை மசோதாவை நிறைவேற்ற முயற்சி நடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இன்று வியாழக்கிழமை (11) ஒன்ராரியோ மாகாண முதல்வர் Doug Fordஉடன் ஒரு சந்திப்பை மாகாண சபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் ஒழுங்கு செய்துள்ளார். இந்த ஒரு மணிநேர மெய்நிகர் நிகழ்வுக்காக கட்டணச் சீட்டொன்றின் விலை ஆயிரம் டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபை உறுப்பினரான விஜய் தணிகாசலம் சந்திப்பிற்கான அழைப்பிதழில், முதல்வருக்கு நிதி சேகரித்து கொடுப்பதன் மூலம் தமிழ் இனப்படுகொலை மசோதாவை வெற்றியடையச் செய்யமுடியுமாம். இது தமிழ் சமூகத்திற்கு நீண்ட காலத்திற்கு உதவும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரம் டொலர்கள் கொடுத்து எங்களது ஆதரவைத் தெரிவிப்பதன் மூலம், தமிழ் இனப்படுகொலை மசோதாவை நிறைவேற்ற முதல்வரை நாம் வலியுறுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருவகை இலஞ்சம் என கனடாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளாக தெரிவானவர்கள், தமது நிலைப்பாட்டை வலியுறுத்தி கட்சி தலைமையை சம்மதிக்க வைக்க வேண்டுமே தவிர, பணம் கொடுத்து அல்ல என விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.