இங்கிலாந்து அரசு குடும்பம் எங்களைப் பற்றி பொய்யான தகவலைப் பரப்பியதாக நடிகையும், இளவரசர் ஹாரியின் மனைவியுமான மேகன் மார்கல் தெரிவித்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்திவுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகிய இருவரும் இங்கிலாந்து அரச குடும்பப் பதவிகளிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தினருடன் ஆலோசனை நடந்தது. அவர்களின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கினார்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய இளவரசர், இளவரசி பட்டங்களைப் பயன்படுத்த மாட்டார்கள். மக்களின் வரிப் பணத்தையும் பெறமாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
ஹாரி – மேகன் மார்கல் அரச குடும்பத்திலிருந்து விலகியது குறித்துப் பல்வேறான கட்டுரைகளை பிரிட்டன் பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன. இவற்றுக்கெல்லாம் எந்தவித பதிலையும் தெரிவிக்காமல் ஹாரியும் – மேகன் மார்கலும் மவுனம் காத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ஹாரியும், மேகனும் கனடா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தனர். இந்த நிலையில் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் மனம் திறந்து பேசியுள்ளனர். இந்த நிகழ்ச்சி மார்ச் 7ஆம் திகதி வெளியாகிறது.
இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது முன்னோட்டத்தில், நீங்கள் உண்மையைப் பேசுவதை இங்கிலாந்து அரண்மனை எவ்வாறு எடுத்துக் கொள்ளும்? என்று ஓப்ராமேகனிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மேகன் பதிலளிக்கும்போது, “எங்களைப் பற்றி பொய்களைப் பதியவைத்து கொண்டு நாங்கள் இன்னமும் அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேகனின் பதில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.