தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் திமுகவின் அணுகுமுறை காரணமாக பழைய மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இதனால் திமுக கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
2016 படுதோல்விக்குப்பின் திராவிடக்கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்கிற முடிவை மறு பரிசீலனை செய்த மக்கள் நலக்கூட்டணியில் இருந்த இடதுசாரிகள் கூட்டியக்கங்கள் மூலம் திமுகவுடன் மீண்டும் ஒன்றிணைந்தனர். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையை விசாரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையை ஏற்கிறேன், அவரை முதல்வராக்கியே தீருவேன் என வைகோ திமுகவுடன் இணைந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனும் திமுக அணியில் இணைந்தார். இதனால் திமுக கூட்டணி வலுவான கூட்டணியாக மக்கள் இயக்கமாக மாறியது. ஸ்டாலின் தலைமையை அனைவரும் அங்கீகரித்து அரசுக்கு எதிரான போராட்டங்களில் கூட்டியக்கமாகப் பங்கேற்றனர்.
திமுக கூட்டணி அல்ல திமுக தோழமைக்கட்சிகள் அணி என அழைக்கப்பட்டது. சிஏஏ போராட்டம், வேளாண் சட்டம், புதிய கல்விக்கொள்கை, நீட் மருத்துவத் தேர்வு, இந்தித் திணிப்பு என மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஓரணியாக ஒரே குரலாக ஓங்கி ஒலித்தது திமுக தோழமைக்கட்சிகள் குரல்.
அதே அணி மக்களவைத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட்டது. பெருவெற்றி பெற்றது. கூட்டணி என்பதைத்தாண்டி தோழமையுடன் இருந்தக்கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வந்த நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தையில் மாறுபட்டு பிரிந்து நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சில மாதங்களாகவே திமுக 180 தொகுதிகளுக்கு மேல்தான் நிற்கப்போகிறது,
கூட்டணிக் கட்சிகளுக்கு சிங்கிள் டிஜிட் என ஊடகங்களில் வந்தபோது ஏதாவது செய்தி வரும் அதெல்லாம் உண்மையாக இருக்காது என்று இருந்த கூட்டணிக்கட்சிகள் கடந்த 2 நாட்கள் நடந்த சம்பவங்களால் அதிர்ந்து போயுள்ளன.
காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் என்று அதிர்ச்சி கொடுத்த திமுக அதிகப்பட்சமாக 18-க்கு மேல் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று கூறியதால் காங்கிரஸ் தரப்பு அடுத்து என்ன செய்வது என நாளை ஆலோசிக்கிறது. இடதுசாரிகளுக்கு 6 தொகுதிகள் அதிகப்பட்சம், மதிமுகவுக்கு 7 அல்லது 8 என்று அறிவித்து அடுத்து அழைக்கிறோம் என அறிவித்து விட்டு இதுவரை மீண்டும் அழைக்காததால் அவர்கள் தரப்பு என்ன செய்வதென்று யோசிக்க முடிவாக இடதுசாரி கட்சிகள் கூட்டாகக் கலந்துப் பேசியுள்ளனர்.
பின்னர் வைகோவை தொடர்புக் கொண்ட இடதுசாரி தலைவர்கள் இதுகுறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தொகுதி உடன்பாடு முடிந்தநிலையில் அறிவாலயம் செல்வதை தவிர்த்து திருமாவளவனும் இந்த அணியில் சேர ஒட்டுமொத்தமாக மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஓரணியில் திமுகவுக்கு எதிராக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய இடதுசாரி தொண்டர் ஒருவர், “இதுபோன்ற ஒரு அணுகுமுறையை திமுகவில் இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை, கூட்டணியுடன் சேர்ந்தால் தான் வெல்ல முடியும், ஆனால் வெல்வது ஒன்றை மட்டும் மனதில் வைத்து கூட்டணிக் கட்சிகளை பெரியண்ணன் மனோபாவத்துடன் அணுகுகிறார்கள் இதுபோன்ற அணுகுமுறை திமுக தலைவர் கருணாநிதியிடம் இருந்ததில்லை.
தற்போது கூட்டணிக்குறித்த பேச்சு வார்த்தைகள் நடக்கும் நிகழ்வுகள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரிந்துதான் நடக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
“அதிமுக கூட்டணிக்கு செல்லவிருந்த நிலையில் பத்திரிகை வைக்க வந்த பாமக தலைவர் ராமதாஸை கூட்டணிக்குள் கொண்டு வந்தவர் கருணாநிதி, ஆனால் 5 ஆண்டு தோழமைக் கட்சிகளாக ஒன்றாக களம் கண்டவர்களை விரட்டி விடும்போக்கு வேதனையான ஒன்று, திமுக தோழமைக்கட்சிகள் காங்கிரஸ் உட்பட கூட்டணியில் தொடருவதா என்ற முடிவை நோக்கி தள்ளப்படுவது தமிழக அரசியலில் சிக்கலான ஒரு நிலை ஆகும்.
திமுக போன்ற கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் கூட்டணிக்கட்சிகளை புறந்தள்ளாமல் வேண்டிய தொகுதிகளை அளித்தாலே எளிதாக பெரும்பான்மை பெறலாம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தையில் அதிமுக, திமுக இரண்டுப்பக்கமும் சிக்கல் வலுவாக உள்ள நிலையில் திமுக கூட்டணி மொத்தமாக வேறு இடத்திற்கு நகருமேயானால் மூன்றாவது அணி ஒன்று வலுவாக அமையவும் வாய்ப்புண்டு. இதனால் பலத்த இழப்பு அனைவருக்கும்தான்.