புதிய கூட்டுக்கள், புதிய பெயர்களோடு வருவது தமிழ்தேசியத்திற்கு அவசியமில்லை என்று தமிழீழ விடுதலை இயக்கம் கருதுவதாக அதன் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.
டெலோவின் தலைமைக்குழு கூட்டம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஐநா மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அதற்கு அனைத்து அங்கத்துவநாடுகளின் ஆதரவினையும் குறிப்பாக இந்தியாவின் ஆதரவினையும் நாங்கள் கோரிநிற்கிறோம்.
தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளை தீர்க்ககூடிய அதனை நிறைவு செய்யக்கூடிய அரசியல்யாப்பு ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். அதன் மூலம் இந்த நாட்டில் இருக்கின்ற அரசியல் பிரச்சனை தீர்விற்கு வர வேண்டும். இந்த அரசு அதனை கருத்தில் எடுக்க வேண்டும்.
அத்துடன் 13ஆம் திருத்த சட்டத்தை முற்றுமுழுதாக அமுல்படுத்தி அதனை அடிப்படையாக வைத்து ஒரு மாகாணசபை தேர்தலை மிக விரைவாக நடாத்தி அரசியல் தீர்விற்கான ஒரு ஆரம்ப கட்ட நடவடிக்கையை இந்த முன்னெடுக்க வேண்டும்என்று அரசிடம் நாம் கோருகிறோம்.
தமிழ் கட்சிகளின் கூட்டு தொடர்பில் ஒரு உறுதியான முடிவினை எடுத்துள்ளோம். 2001ஆம் ஆண்டில் ஆயுத ரீதீயாக பலப்பட்ட ஒரு இனமாக இருந்தநேரத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் பலமான ஒரு அமைப்பாக இயங்கி வந்திருக்கின்றது.
அதிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் தான் புதிய கூட்டினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கின்றார்கள்.
எனவே கூட்டமைப்பு இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அதற்குள்ளே அனைவரும் மீண்டும்வந்து இணைய வேண்டும். புதியகூட்டுக்கள், புதியபெயர்களோடு வருவது தமிழ்தேசியத்திற்கு அவசியமில்லை என்று எமது கட்சி கருதுகின்றது.
தமிழ்தேசிய பேரவை என்பதற்குமப்பால் தமிழ்மக்களிற்கான ஒரு ஐக்கியம் அவசியமாகின்றது. அதனை கருதியே கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அங்கு ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகளால் தான் இந்த கட்சிகள் பிரிந்து நின்று தனித்து செயற்ப்பட்டனர்.
அதேகட்சிகளை வைத்துக்கொண்டு புதிய ஒரு கூட்டை ஆரம்பிப்பதை விட கருத்து வேறுபாடுகளிற்கு காரணமான விடயங்களை சீர்செய்து கூட்டமைப்பானது மீள கட்டியமைக்கப்பட்டு, செழுமைப்படுத்தப்பட்டு அனைத்து கட்சிகளையும் உள்வாங்கிக்கொண்டு பயணிப்பதையே மக்கள் எதிர்பார்கின்றனர்.
அதுவே எமது மக்களின் எதிர்காலத்திற்கும் அரசியலுக்கும் பலம் சேர்க்கும் என்று எமது கட்சி கருதுகின்றது. அத்துடன் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் இவ்வாறான ஒரு கட்டமைப்பை உருவாக்கப்போவதாக முன்வைக்கப்படும் கருத்துக்களை நாம் முற்றிலும் மறுதலிக்கின்றோம்.
அனைவரும் ஒருமித்த கொள்கையின் கீழ் செயற்படக்கூடிய வடிவமைப்பை கூட்டமைப்பு கொள்ள வேண்டும். அதனை செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். மக்களின் விருப்பமாகவே அதனை பார்கிறோம் என்றார்.