30.5 C
Jaffna
April 17, 2024
உலகம்

உலகின் மிகப்பழமையான பியர் உற்பத்தி கூடம் கண்டுபிடிப்பு!

பண்டைய எகிப்திய நகரமான அபிடோஸில், சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ஆயிரக்கணக்கான லிட்டர் பியர் தயாரிக்கும் மதுபானக் கூடத்தைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுவரை கண்டறியப்பட்டவற்றுள் உலகின் மிகப்பழைமையான பியர் தயாரிக்கும் கூடம் இதுதான்.

பண்டைய எகிப்து சமுதாயத்தில் பியர் ஒரு முக்கிய அங்கமாகும். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பியர் குடித்துள்ளனர். குறிப்பாக, ஏழை மக்களின் பிரதான பானமாகவும் செல்வந்தர்களின் உணவாகவும் பியர் இருந்துள்ளது. தெய்வங்களுக்கும் பியரை பிரசாதமாக படையலிட்டு வணங்கினர். தொழிலாளர்கள் தங்கள் ஊதியமாக ஒரு நாளைக்கு மூன்று முறை பியர் பெற்றனர். இந்த சூழலில் தான் பியர் தயாரிக்கும் தொழிற்கூடம் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எகிப்தின் பண்டைய நகரம் அபிடோஸ். எகிப்தில் காணப்படும் தொல்பொருள் தளங்களில் மிகவும் முக்கியமானதாகும். அல் – பால்யானா (Al-Balyanā ) நகருக்கு அருகில் நைல் நதிக்கு மேற்கே அமைந்துள்ளது, அபிடோஸ். எகிப்தின் ஆரம்ப கால அரசர்களின் முக்கிய நகரமாகவும், எகிப்திய கடவுள் ஒசிரிஸ் (Osiris) வழிபாட்டிற்கான யாத்திரை மையமாகவும் இருந்தது. ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய அபிடோஸ் நகரம் பிற்காலத்தில் புகழ் மங்கி, பாலை மணலால் மூடப்பட்டது.

1970 களின் பிற்பகுதிகளில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்ற போது தான் இங்கு, கி.மு 2900 க்கு முன் வாழ்ந்த எகிப்திய அரசர்களின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்குப் பிறகு, தொல்லியல் ரீதியாக இந்தப் பகுதி புகழ் பெற்றது.

இங்கு சுமார் 5000 ஆண்டுகள் பழைமையான, ஆயிரக்கணக்கான லிட்டர் பியர் உற்பத்தி செய்யக்கூடிய மதுபானக் கூடத்தைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கி.மு 3100 அளவில் அரசர் நர்மன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 20 மீட்டர் நீளமும் 2.5 மீட்டர் அகலமும் கொண்ட பியர் தொழிற்சாலை, சுமார் 22,400 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்டது. ஒவ்வொன்றும் எட்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 40 களிமண் பானைகளைக் கொண்டுள்ளது.

இந்த அரிய கண்டுபிடிப்பைக் அகழாய்வு செய்து கண்டுபிடித்துள்ள முனைவர் மாத்தீவ் ஆடம்ஸ், “எகிப்தின் ஆரம்பகால மன்னர்களுக்கு நடைபெற்ற இறுதிச் சடங்குகளின் போது பியர் பயன்படுத்தப்பட்டது என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எகிப்தின் சுற்றுலாத் துறை. அதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முயற்சியாகப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழைமையான சின்னங்களைக் காட்சிப்படுத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டில் ஒரு கோடியே முப்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் எகிப்துக்கு வந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு முப்பத்தைந்து இலட்சம் பேர் மட்டுமே வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆங் சான் சூகி வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார்

Pagetamil

ஈரான் ஏவுகணைகளை இடைமறிப்பதில் சவுதி பங்கேற்கவில்லை!

Pagetamil

அவுஸ்திரேலியாவில் மத வழிபாட்டிடத்தில் கத்திக்குத்து!

Pagetamil

போர் பதட்டத்தை தணிக்க வலியுறுத்தும் உலக தலைவர்கள்

Pagetamil

ரஷ்ய பாணியில் பரிசோதனை தாக்குதல் நடத்திய ஈரான்!

Pagetamil

Leave a Comment