சில பிரதேசசபைகளில் உப தவிசாளர் பதவிகளை தரலாம் என தமிழ் அரசு கட்சி வீசிய வலையில் சிக்கியுள்ளது ஜனநாயக போராளிகள் குழு.
தமிழ் அரசியலில் அங்கிடுதத்திகளாக அறியப்பட்டவர்கள் ஜனநாயக போராளிகள் குழுவினர். கோத்தபாய ராஜபக்ச பாதகாப்பு செயலாளராக இருந்த போது உருவாக்கிய குழு, பின்னர் ஜனநாயக போராளிகள் என்ற பெயரில் பிரதான அரசியல் கட்சிகளுடன் ஒட்டியிருக்கும் குழுவாக செயற்பட்டு வருகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்ட சமயத்தில், அதன் பங்காளிக்கட்சியாக இணைக்க தகுதியற்றவர்கள் என குறிப்பிட்டு, “சின்ன வீடாக“ வைத்திருக்கப்பட்டார்கள்.
தற்போது, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது, அதன் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாக ஜனநாயக போராளிகள் கட்சி இணைக்கப்பட்டது. இது முட்டாள்த்தனமான அரசியல் நகர்வு என, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிடம் சுட்டிக்காட்டப்பட்டது. என்றாலும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலானவர்கள் கலாவதியானவர்கள் என்பதால்- அவர்களால் புத்திசாதுரியமாக முடிவெடுக்க முடியவில்லை.
அண்மைய உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவில், ஜனநாயக போராளிகள் தரப்பினால் நிறுத்தப்பட்ட ஒரேயொருவர் வெற்றியீட்டினார். அவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். பருத்தித்துறை பிரதேசசபையில்- தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் தொகுதியில் அவர் வெற்றியீட்டினார்.
தேர்தலின் பின்னர், யாழ்ப்பாணத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆசனப்பங்கீடு நடந்த போது, ஜனநாயக போராளிகள் தரப்புக்கு மேலும் 4 போனஸ் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டது. உள்ளூராட்சி தேர்தலில் யாழில் ஜனநாயக போராளிகள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியன மிகக்குறைந்தளவான வட்டாரங்களையே வென்றன. ஆனால், அதிகமான போனஸ் ஆசனங்களை எடுத்துக்கொண்டன. இது புத்திசாலித்தனமான அரசியல் செய்பவர்கள் யாரும் செய்யும் செயலல்ல என்ற போதும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அதை செய்தது.
தற்போது, தமிழ் தேசிய பேரவைக்கும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. நேற்று நடந்த இந்த நிகழ்வில் ஜனநாயக போராளிகள் பங்கேற்கவில்லை.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டணி வைப்பதில் உடன்பாடு இல்லையென்பதால், ஜனநாயக போராளிகள் பங்கேற்கவில்லையென- அந்தக்குழுவின் முடிவெடுக்கும் வல்லமையுள்ள ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
எனினும், இந்த முடிவில் ஜனநாயக போராளிகள் குழுவுக்குள்ளேயே ஒருமித்த கருத்தில்லை. குழுவின் தலைவர் வேந்தன் உள்ளிட்ட சிலர் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் வெற்றியீட்ட விரும்புவதாகவும், அதற்கு தமிழரசு கூட்டணிதான் சரியென அவர்கள் கணக்கிட்டுள்ளதாகவும், பதவிக்காக இப்படியான முடிவை ஒரு தலைப்பட்சமாக எடுத்துள்ளதாக அந்த குழுவிலுள்ள மற்றொரு சிலர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.
ஜனநாயக போராளிகள் தம்முடன் இரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளதாகவும், பருத்தித்துறை பிரதேசசபையில் அவர்கள் தம்மை ஆதரிக்க வாக்குறுதியளித்துள்ளதாகவும் தமிழரசு கட்சி பிரமுகர் ஒருவர் கடந்த வாரமே தமிழ்பக்கத்திடம் தெரிவித்திருந்தார்.
பருத்தித்துறை, கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேசசபைகளில் உப தவிசாளர் பதவிகளை தரலாம் என தமிழரசு கட்சி தலைவர் தமக்கு வாக்களித்துள்ளதாக அந்த குழுவின் முடிவெடுக்கும் நிலையிலுள்ள ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
கஜேந்திரகுமார் அண்மையில் த.சித்தார்த்தன் வீட்டுக்கு சென்று பேச்சு நடத்திய போது, ஜனநாயக போராளிகள் குழுவின் தலைவர் வேந்தனும் அங்கிருந்தார். அரசியலமைப்பு, கொள்கைக்கூட்டணி பற்றியெல்லாம் அவர் விரிவாக பேசிக்கொண்டிருக்கும் போது- வேந்தன் குறுக்கிட்டு- “அப்ப நாங்கள் ஆட்சியமைக்க நீங்கள் சப்போர்ட் பண்ணுவியளோ?“ என அப்பாவித்தனமாக கேட்டுக்கொண்டிருந்தார்.
ஒன்றிரண்டு முறையல்ல- பல முறை இதே சம்பவம் அன்று நடந்தது.
“யாரடா இது புது காமெடியனாக இருக்கிறதே“ என்ற பாணியில் கஜேந்திரகுமார், வேந்தனை பார்த்து சலித்துக் கொண்டிருந்தார்.
கஜேந்திரகுமாருடனான கூட்டணிப் பேச்சில் கலந்துகொண்டு, “நாங்கள் ஆட்சியமைக்க நீங்கள் சப்போர்ட் பண்ணுவியளோ?“ என அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்த வேந்தன்- இரண்டு நாளின் பின்னர், கஜேந்திரகுமார் தரப்புடனான கூட்டணி உடன்படிக்கைக்கு செல்லவில்லை. கஜேந்திரகுமார் தரப்புடனான கூட்டணியில் தமக்கு உடன்பாடில்லையென்ற காரணத்தை வேறு கண்டுபிடித்துள்ளனர்.
எதிர்வரும் மாகாணசபை தேர்தலை மனதில் வைத்து ஜனநாயக போராளிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இருப்பினும், வேந்தன் உள்ளூராட்சி தேர்தலில் ஒரு வட்டாரத்திலும் வெற்றியடைவாரா என்பதே நிச்சயமில்லாதுள்ளது என்பதே யதார்த்தம். இதற்குள் மாகாணசபை கனவு கண்டு, அங்குமிங்கும் அந்தர்பல்டியடிப்பவர்களை அங்கிடுதத்திகள் என அழைப்பதில் தவறில்லைத்தானே!
தாமதமாகவேனும் சங்கு அணி நிலைமையை உணர்ந்துள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்களை உள்ளூராட்சிமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்க நடவடிக்கையெடுக்கவுள்ளனர்.