ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகி, கட்சிக்கு துரோகமிழைத்த ஹரீன் பெர்னாண்டோ, தேசியப் பட்டியல் இடத்தை மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும். இதனால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவரை நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ பரிந்துரைத்துள்ளார்.
ஹரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து, அந்த ஆசனத்தை மீண்டும் உரிய இடத்திற்கே வழங்க வேண்டும் என நளின் பண்டார ஜயமஹ தெரிவித்தார்.
“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் வெற்றிடமாகியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக பெர்னாண்டோ வரலாம். பெர்னாண்டோ எங்களிடம் தேசியப் பட்டியல் இடத்தை ஒப்படைத்தால், ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்றார்.
ஹரின் பெர்னாண்டோவிடம் இது தொடர்பில் ஊடகங்கள் வினவியபோது,
“நளின் பண்டார என்னைக் கேட்பதற்கு முன் திருமதி டயானா கமகேவை ராஜினாமா செய்யுமாறு கோர வேண்டும். நளின் விரும்பினால், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் தலைவருக்காக பிரச்சாரம் செய்ததற்காக எனக்கு செலுத்த வேண்டிய நிதியின் தொகையை அவரிடம் காட்ட முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.I