திருமணமான தம்பதியினருக்கிடையிலான மோதல் விவகாரங்களில் பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் இனிமேல் தலையீடு செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் அண்மைக்காலமாக குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருமணமான தம்பதிகளிடையேயான முரண்பாடுகள் முற்றி, வன்முறைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மலையக பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள தோட்ட பகுதிகளில் இருந்து பெரும்பான்மையான மோதல் விவகாரங்கள் பதிவாகுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த மோதல் முற்றி, கணவனால் படுகொலைகளும் நடத்தப்படுவதாக குறிப்பிட்டார். அண்மையில் அக்கரபத்தனை பகுதியில் 28 வயதான மனைவியை கொன்ற கணவன், சடலத்தை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் வீசி தற்கொலை நாடகம் ஆடினார்.
நீண்டகால குடும்பப் பிரச்சினையினால் அந்த நபர் தனது மனைவியை கொன்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இதேபோன்ற கொலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதன் விளைவாக குடும்ப வன்முறை மற்றும் கொலைகளை குறைப்பதற்காக, தம்பதிகளுக்கு இடையில் தனிப்பட்ட சர்ச்சைகளைத் தீர்ப்பதற்குத் தலையீடு செய்வதற்கும், தம்பதிகளுக்கு இடையில் தனிப்பட்ட சர்ச்சைகளைத் தீர்க்க உதவுவதற்கும் பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் தலையீடு செய்யவுள்ளது.