ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், அவரது மூத்த சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையிலான முரண்பாடு உச்சமடைந்துள்ளது. ஆளுங்கூட்டணிக்குள் சகோதரருக்கு எதிராக தனது நிலையை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள பிரதமர், அதன் ஒரு அங்கமாகவே பிரதமர் பதவியை துறக்கமாட்டேன் என்ற பகிரங்க அறிவித்தல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து எழுந்துள்ள அரசியல் குழப்பத்தைடுத்து, ஆளும் ராஜபக்ஷ சகோதரர்களிற்கிடையிலான உரசல் உச்சமடைந்துள்ளது.
புதிய அமைச்சரவை நியமனத்துடன் இந்த மோதல் பகிரங்கமாகியதுடன், வெளித்தெரிய ஆரம்பித்தது.
புதிய அமைச்சரவை நியமனத்திற்கான முன்னோடி கூட்டங்களில் ஜனாதிபதி, பிரதமருக்கிடையில் முரண்பாடு எழுந்தது.
ஊழல் குற்றச்சாட்டிற்கு இலக்காகாத இளம் எம்.பிக்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக்க ஜனாதிபதி விரும்பினார். எனினும், மூத்த பிரமுகர்களை அமைச்சர்களாக்க பிரதமர் விரும்பியிருந்தார். ஜனாதிபதி அதற்கு இணங்காததையடுத்து, பழையவர்களையும் புதியவர்களையும் இணைத்து கலப்பு அமைச்சரவை நியமிக்க வேண்டுமென பிரதமர் கேட்டிருந்தார்.
எனினும், ஜனாதிபதி அதை ஏற்கவில்லை. அந்த கூட்டத்தில் எழுந்த சலசலப்பையடுத்து பிரதமர் இடைநடுவில் வெளியேறி சென்றார்.
மறுநாள் அமைச்சரவை நியமனம் வழங்கப்படுவதற்கு சற்று முன்னதாக தொலைபேசியில் ஜனாதிபதியை தொடர்பு கொண்டு பேச முற்பட்டுள்ளார் பிரதமர். எனினும், அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.
அமைச்சரவையில் சேர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் கோரியவர்களில், நெடுஞ்சாலைகள் அமைச்சராக இருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அடங்குகிறார். அவருக்கு எதிராக வீதி நிர்மாணத் திட்டங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால் அமைச்சரவையில் இணைக்கப்படவில்லையென தெரிய வருகிறது.
எவ்வாறாயினும், குற்றச்சாட்டுகளை அவர் திட்டவட்டமாக மறுப்பதுடன், ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உறுப்பினர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி நீதிமன்றில் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்பின்னர், புதிய அமைச்சரவை பதவியேற்பில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை.
பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டு சர்வகட்சி அரசு அமைக்கப்பட வேண்டுமென, ஆளும் பெரமுன எம்.பிக்கள் 10 பேர் அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதிக்கு விசுவாசமான எம்.பிக்களாவர். அந்த எம்பிக்களை பிரதமர் சந்தித்து பேசியிருந்தார். அவர்களின் முடிவை திரும்பப் பெற பிரதமர் முயன்ற போதும், அது வெற்றியளிக்கவில்லை.
இந்த பின்னணியில், அரசாங்கத்தின் நாடாளுமன்றக் குழுவிற்குள் தனது பதவியை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை பிரதமர் ராஜபக்ச ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுங்கூட்டணிக்குள் தனது பிடியை வலுப்படுத்துவதன் மூலம், தற்போது கட்சிக்குள் தனக்கெதிரான நகர்வுகளை முறியடிப்பதுடன், மகன் நாமல் ராஜபக்ஷவின் எதிர்கால ஜனாதிபதி கனவை உறுதி செய்ய மஹிந்த நம்புகிறார்.
இதேவேளை, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தை அண்மையில் பிரதமர் கூட்டி, பிரதமர் தலைமையிலேயே அரசு செயற்படுமென தீர்மானித்ததாக, பிரதமர் ஊடகப்பிரிவு அறிவித்தது.
எனினும், பிரதமர் ஆதரவு எம்.பிக்கள் எத்தனை பேர் அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை. எனினும், தற்போதைய நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை 80 இற்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




