தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்ற பதுளை மாவட்ட எம்.பி அரவிந்த குமாரின் தலவாக்கலை லிதுல மெரயா பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு முன்பாக இளைஞர்கள் குழுவொன்று நேற்று (23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சரை இராஜினாமா செய்யுமாறு கோரி தோட்டப்பகுதி இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
”நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம், எரிவாயு தட்டுப்பாடு, மின்வெட்டு போன்றவற்றால் நாடே பாதிக்கப்பட்டு, அரசு பதவி விலக வேண்டுமென ஒட்டுமொத்த மக்களும் வலியுறுத்தி வரும் நிலையில், பதவி ஆசையில், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சராக எஸ்.அரவிந்தகுமார் பொறுப்பேற்றுள்ளார். அரவிந்தகுமார் இதுவரை தோட்டப் பகுதியில் எதனையும் செய்யவில்லை” என போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.
இராஜாங்க அமைச்சர் எஸ்.அரவிந்த குமாரின் வீட்டுக்கு முன்பாக இளைஞர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அருகில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அமைச்சரின் வீட்டிற்கு அருகில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.





