கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலேவ கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 29ஆம் திகதி காலை, தனது வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கருவலகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாணவியின் இணையவழி கல்விக்காக தொலைபேசி தேவைப்பட்ட போது, கூலி வேலை செய்யும் தாயார் அதை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இணையவழி கல்விக்கு வாங்கிக்கொடுத்த தொலைபேசியில், கருவலகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன் ஒருவருடன், அந்த மாணவிக்கு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி இரவும் 29ஆம் திகதி காலையிலும் மாணவி தனது காதலனுடன் குறுஞ்செய்திகளை பரிமாறிக்கொண்டதும், அதன் பின்னர் அவர் ஏதோ கவலையில் இருந்ததும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறுமியின் தந்தை இரவில் வயல் காவலிற்கு சென்றுவிட்டு மறுநாள் காலை 7 மணிக்குப் பிறகு வீடு திரும்புவார். மாணவியின் தாயும் அதிகாலை 5 மணியளவில் மரக்கறி பறிப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வதுடன், சகோதரியும் மஹவ பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்காகச் சென்றுள்ளார்.
சிறுமி, இளைஞனுடன் தொலைபேசியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்து 200 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள பாவனையற்ற கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதிகாலையில் இருந்து தனது மகள் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும், கடந்த 29ஆம் திகதி நண்பகல் வரையில் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் சிறுமியின் தந்தை கருவலகஸ்வெவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
போலீசார் வந்து வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சோதனையிட்டபோது சிறுமி எழுதிய கடிதம் ஒன்று மீட்கப்பட்டது. வாழ்க்கையில் விரக்தியடைந்து தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், கருவலகஸ்வெவ பொலிஸார், கிராம மக்கள் அருகில் உள்ள பல கிணறுகளில் தண்ணீரை இறைத்து சோதனை நடத்தியதில், மாணவியின் சடலம் மீட்கப்பட்டது.
கடந்த 29ஆம் திகதி காலை 6 மணியளவில் மாணவி கிணற்றில் குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
மாணவனின் காதலன் என்ற சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய இளைஞனை கருவலகஸ்வெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்..