முஹம்மது நபியின் பிறந்தநாளை முன்னிட்டு உலக முஸ்லிம்களால் மீலாத்-உன்-நபி அல்லது ஈத்-இ-மிலாத் இன்று நினைவுகூரப்படுகிறது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தமிழ் பக்கமும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வாழ்த்து
எந்தவொரு சமூகத்திலும் வாழ்கின்ற மனித குலத்தின் சிந்தனை மற்றும் நடத்தை என்பவற்றின் அடிப்படையாக அமைவது, அவர்கள் நம்பிக்கைக் கொண்டு ஏற்றுக்கொள்கின்ற ஆழமான மார்க்கமே ஆகும்.
இறைவன் நேர்மையுள்ள மனிதர்களுக்கு கருணை காட்டுவதோடு, அவ்வாறான
மனிதர்களுக்குத் தகுதியான உயர் அந்தஸ்த்து வழங்கப்படுவதை, முஹம்மத் நபி அவர்களின் வாழ்க்கை மற்றும் முன்மாதிரியான நடத்தை என்பவற்றை ஆழமாகக் கற்கும்போது விளங்கிக்கொள்ள முடிகிறது.
இலங்கை உட்பட உலகவாழ் அனைத்து முஸ்லிம்களினதும் கௌரவத்துக்குரிய முஹம்மத்
நபி (ஸல்)அவர்களின் வழிகாட்டல்களை மேலும் சமூகமயப்படுத்தி ஒற்றுமையை உருவாக்குவதே முஸ்லிம்கள் நபி அவர்களுக்குக் கொடுக்கக் கூடிய விசேட கௌரவமாகும் என்று நான் நினைக்கின்றேன்.
அவர்களின் வாழ்வு முழுவதும் மனித நலனைக்கருத்திற்கொண்டு கடைப்பிடித்து வந்த
குணாம்சங்களை, ஏனைய காலங்களை விடவும் தற்போதைய சூழ்நிலையிலேயே சமூக நலனை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்துவது பொருத்தமானதாக அமையும். இன்றும், உலக மக்களின் மரியாதைக்குரிய முஹம்மத் நபி (ஸல்)அவர்களின், வாழ்க்கை வழிகாட்டல்களை கௌரவத்துடன் பின்பற்றி வருகின்ற இலங்கை முஸ்லிம்கள் உட்பட உலகவாழ் முஸ்லிம்களின் வாழ்க்கையில் சுபீட்சமும் சௌபாக்கியமும்
உருவாக வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வாழ்த்து
உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமிய பக்தர்களின் தீர்க்கதரிசியான முஹம்மது நபி நாயகம் (ஸல்)அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் அனைத்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மனிதநேயம் நிறைந்த, கண்ணியமான, மனித அன்பை கட்டியெழுப்புவதற்கு, தனது தனிப்பட்ட வாழ்க்கையின் மூலம் பிறருக்கு முன்மாதிரியாக விளங்கி, அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முஹம்மது நபி நாயகம்(ஸல்) அவர்கள் இஸ்லாமிய விழுமியங்களின் அமைப்பை நிறுவிய முன்னோடியாவார். பிறரின் நம்பிக்கையை வென்றெடுத்த மையால் அவர் அல் அமீன் என்று அறியப்பட்டார்.
முஹம்மது நபி நாயகம்(ஸல்) அவர்கள் அக்காலத்தில் காணப்பட்ட சமூகத்தின்
ஏற்றத்தாழ்வுகளை அறிவார்ந்த புரட்சியால் இல்லாதொழித்து சமத்துவத்திற்காக அயராது
உழைத்த ஒரு அறிஞராவார்.உலகில் தோன்றிய தீர்க்கதரிசிகள் மத்தியில், முஹம்மது நபி நாயகம்(ஸல்) அவர்களின் நோக்கமானது மனித சமுதாயத்தை நல்லொழுக்கம் மற்றும் அகிம்சையால் நிரப்புவதாகும்.
உலக வாழ் மக்கள் அனைவருக்கும் நல்வழி காட்டுவதே கடவுளின் தூதரான நபி நாயகத்தின் போதனையின் சாராம்சமாகும். அவ்வழி செல்லும் அனைத்து முஸ்லிம் மக்களும் சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப தங்கள் பங்களிப்பை உச்ச அளவில் வழங்க முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.
கொரோனா தொற்றை எதிர்கொண்டு நாம் கடந்துச் செல்லும் இந்த கடுமையான காலத்தை வெற்றி கொள்வதற்கு நபி நாயகம் அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாக கொள்ளுமாறு முஸ்லிம் மக்களுக்கு நான் நினைவூட்டுகின்றேன். சமய வழிபாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி, ஏழை மக்களுக்கு உதவி செய்து நபி நாயகம் அவர்களின் பிறந்த தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும் இலங்கை மற்றும் உலக வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் இனிய மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் வாழ்த்து
அன்பு, பக்தி மற்றும் சமத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதன் மூலம் சமுதாயத்தின் செழிப்புக்காக தன்னை அர்ப்பணித்த முஹம்மது நபி அவர்களின் பிறந்த நாளை நாம் புனிதமாகக் கொண்டாடுவோம். அந்த பார்வை ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டட்டும்!
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் வாழ்த்து
இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்களால் வாழ்வின் சகல துறைகளிலும் பின்பற்றப்பட்டு வருகின்றார். இறை வேதமான அல் குர்ஆனுக்கு அடுத்ததாக முஸ்லிம்களின் மூலாதாரமாக நபிகளாரின் வழிமுறையே விளங்குகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரை,நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நாம் பல்வேறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றோம். பொதுவாக மக்களின் இயல்பு வாழ்க்கை பல விதங்களிலும் பெரிதும்
பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அல் குர்ஆனின் போதனைகளும், நமது உயிரிலும் மேலான நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியுமே அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வாக அமையும் என்பதில் நாமனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.
தீய சக்திகளால் நமது ஈமானிய சமுதாயத்தை நோக்கி விடுக்கப்படுக்கின்ற அச்சுறுத்தல்களை ஆன்மிக பலத்தைக் கொண்டு வெற்றிகரமாக முறியடித்து ஈருலகிலும் விமோசனம் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.
சுகாதார வழிமுறைகளைப் பேணி நடந்துக் கொள்வதும் அவசியமாகும்.




