நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் நீதிமன்றக் காவல், செப்., 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசி, சமூக வலைதளத்தில் ‘வீடியோ’ வெளியிட்டார் நடிகை மீரா மிதுன். இது தொடர்பாக, வி.சி., கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் மீராமிதுன் மீது போலீசில் புகார் அளித்தன. புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ், காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 11 ம் திகதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு, மீரா மிதுனுக்கு ‘சம்மன்’ அனுப்பப்பட்டது. இந்த வழக்கில், 14 ம் திகதி மீராமிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் இருவரையும் போலீசார் கைது செய்தனர். புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட இருவரும் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தொடர்ந்து, மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பிற்காக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் நீதிமன்றக் காவலை, செப்., 9 ம் திகதி வரை நீட்டித்து, நீதிபதி எஸ்.அள்ளி உத்தரவிட்டார்.