கல்வி, மருத்துவம், தொழில்வளர்ச்சி என பல துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் முன் மாதிரி மாநிலமாக விளங்குவதன் பின்னணியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள்தான் காரணமாக இருக்க முடியும். அதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் கருணாநிதி தவிர்க்க முடியாதவர். கலைஞர் கருணாநிதி, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் காலமானார்.
இந்த நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், விதி எண் 110-ன் கீழ் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிடும் முதல் அறிவிப்பு இது என்பது கவனிக்கத்தக்கது.
சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூடிய ஸ்டாலின், கலைஞர் ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப்படங்களுடன் சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்றார்.
அதன் தொடர்ச்சியாக, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள நினைவிடத்தின் மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும், முகப்பில் பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எழுத்தால் கலையுலகை ஆண்டு – கொண்ட கொள்கையால் அரசியல் வானில் ஒளிர்ந்த சூரியன் ‘தமிழினத் தலைவர்’ கருணாநிதி நினைவிடத்தின் மாதிரித் தோற்றம்!” என்று பதிவிட்டுள்ளார்.