சுகாதார திணைக்களம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை என்பன இணைந்து கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிங்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அம்பாறை மாவட்டத்தில் நீர்மட்டம் குறைந்த இடங்களை தேர்வு செய்து அடையாளப்படுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் நீர்வழங்கல் அமைச்சின் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிபுணர்களையும் உயரதிகாரிகளினதும் ஆய்வு அறிக்கைகளின் படி இறக்காமம் பிரதேசம் அதற்கு பொருத்தமான இடம் எனும் அறிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலையிட்டு பெற்றுக்கொடுத்தார்.
அதனடிப்படையில் நேற்று இறக்காமம் பிரதேச தவிசாளர் ஜெமீல் காரியப்பர் தலைமையில் பிரதேச செயலாளர், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கூடி கலந்துரையாடி கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிங்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய தமது பிரதேசத்தில் அனுமதிப்பதென தீர்மானித்துள்ளனர்.
அதன் அடுத்த கட்டமாக இன்று காலை இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் ஜெமீல் காரியப்பர், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பிரதேச அரசியல்வாதிகள் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கள விஜயம் சென்று இடத்தை உறுதிப்படுத்த உள்ளனர்.
இதன் பின்னர் இவ்விடம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி பெறப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.