முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேசம் அளம்பில் கிராமத்தில் 50 க்கு மேற்பட்ட இளைஞர்கள் நேற்று (4) சிலரின் வீட்டுக்குள் புகுந்து கல்லால் எறிந்து இனி அளம்பில் புனித அந்தோனியார் ஆலய கட்டிட கணக்கு வழக்குகளை கேட்க கூடாது என மிரட்டி பெரும் தகாத வார்த்தைகளினால் மிரட்டி சென்றுள்ளனர்.
அதே வேளையில் அளம்பில் இராணுவத்தினர் இதை அறிந்து சென்றவேளை சம்பந்தப்பட்ட இளைஞர்களின் மோட்டார் சைக்கிளில் ஓடிச்சென்றுள்ளனர்.
பாதிக்கக்கப்பட்டோர் இன்று (05) முல்லைத்தீவு பொலிசாரிடம் முறையீடு செய்து உரிய நடவெடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
புனித அந்தோனியார் ஆலய கட்டிட பணி முடிவுற்று திறப்பு விழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதற்கு பின்பு அதன் கணக்கறிக்கையில் குளறுபடி இருப்பதாக பலர் சுட்டி காட்டினர். எனினும், அதற்கு முறையான விளக்கமளிக்கப்படவில்லை. பின்னர், அப்போதைய பங்குதந்தை இடமாற்றலாகி சென்றார். புதிய பங்குத்தந்தை வந்த போதும் அவரிடமும் கட்டிட கணக்கறிக்கை கோரிய போதும் கணக்கறிக்கை சமர்பிக்கவில்லை என்பதும் உறுதியாகியது.
இது தொடர்பாக அக் கிராமவாசியும் அந்த ஆலயத்துடன் தொடர்புடையவருமான ஒருவர் குறிப்பிடும் போது, “எங்களுக்கும் கணக்கறிக்கை தொடர்பாக எந்த துண்டுகூட தரவில்லை. ஒவ்வொரு பூசையிலும் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டதாக சொல்லுகிறார்கள். அந்த கணக்கறிக்கை எங்கே?. எமது ஆலயத்துக்கு வங்கி கணக்கு உண்டு. சில பணங்கள் தனிநபர் வங்கி கணக்கிலும் நேரடியாக வைப்பில் இடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. எதுவாக இருப்பினும் வங்கி கூற்றினையும் செலவு செய்த பற்று சீட்டுகளையும் மக்களுக்கு முன்பாக சரி பார்க்க வேண்டும்“ என்றார்.
இந்த நிலையில், “நீதி நேர்மை வாய்மை” எனும் முகநூல் ஒன்றின் ஊடாக கணக்கறிக்கை தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது. சமர்ப்பி சமர்ப்பி, பதில் சொல் பதல் சொல் என ஆயர் இல்லம் நோக்கியும் அப்போதைய பங்குத்தந்தை, கட்டிட கணக்கு விவகாரங்களுடன் தொடர்புபட்டிருந்த கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஆகியோரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இந்த பின்னணியில் நேற்று 50 க்கு மேற்பட்ட இளைஞர்கள் 5 வீடுகளுக்கு சென்று இனி கணக்கறிக்கை கேட்கக்கூடாது, கேட்டால் என்ன நடக்கும் தெரியும் தானே என கேட்டு, வீடுகளிற்கு கற்களால் எறிந்து மிரட்டி உள்ளனர். இந்த ரௌடித்தனத்தில் ஈடுபட்டவர்களில் பெருமானோர் பாடசாலை மாணவர்கள்.
இது தொடர்பாக பிரதேச மக்கள் தரப்பில் தெரிவிக்கையில்,
“இவ் கணக்கறிக்கை தொடர்பாக ஆயர் இல்லம் உடன் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வரவேண்டும். எது உண்மை எது பொய் என்பதை உடன் ஆயர் இல்லம் தெளிவு படுத்த வேண்டும். அதேபோல் நேற்று நடைபெற்ற தாக்குதலுடன் தொடர்புடையோரை கைது செய்து நீதிமன்றில் நிறுத்த வேண்டும். இத்தாக்குதலுக்கு பாடசாலை மாணவர்களை ஏவிவிட்டவர்களையும் உடன் கைது செய்யப்பட வேண்டும். இளைஞர்களை கொண்டு ஆவா குழுக்களை உருவாக்கவா இந்த முயற்சியா?“ என்றனர்.




