தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற வழக்கிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன் முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, பலவந்தமாக ஆள்களைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 2017ஆம் ஆண்டு அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.
இந்தத் தண்டனையை எதிர்த்து க.கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மேன்முறையீட்டு மனு மீது விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 2020 ஜூலை 22ஆம் திகதி அவரது ஆயுள் தண்டனையை ரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுக்க அனுமதியளித்திருந்தது.
இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இ. கண்ணன் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.
இதன்போது வழக்குத் தொடுனரான சட்டமா அதிபர் சார்பில், குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய அரச சட்டவாதி விண்ணப்பம் செய்தார். அதற்கு எதிரான வாதங்களை கண்ணதாசன் சார்பில் ஆயரான சட்டத்தரணிகள் முன்வைத்தனர்.
இதன்போது இந்த வழக்கில் மேலதிக சாட்சிகள் இன்மையால் வழக்கை நிறுத்திக்கொள்வதாக அரசசார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் விரிவுரையாளர் கண்ணதாசன் அத்தனை குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து நீதிபதி கட்டளையிட்டார்.
குறித்த வழக்கில் ஆயராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ. சுமந்திரன் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போது-
ஏற்கனவே வவுனியா மேல்நீதிமன்றம் அவரை குற்றவாளியாக கண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மேற்முறையிடு ஒன்று செய்திருந்தோம்.
அதில் கடந்தவருடம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு தவறானது என்று அந்த தீர்ப்பும் தண்டணையும் புறமொதுக்கப்பட்டன. ஆனாலும் சட்டமா அதிபர் ஒரு மீள் விசாரணை நடாத்துவதற்கான உரித்தை நீதிமன்றிலே தக்கவைத்திருந்தார். ஆதலால் அந்த தீர்ப்பு புறமொதுக்கப்பட்ட பின்னர் கண்ணதாசன் தனது பணியினை மேற்கொண்டுவந்திருந்தார்.
திரும்பவும் அந்த வழக்கினை விசாரிப்பதற்காக இன்று நீதிமன்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வகையில் அரச தரப்பு அவருக்கெதிரான குற்றப்பகிர்வு பத்திரிகையை திருத்துவதற்கு நீதிமன்ற அனுமதியினை கோரியிருந்தனர்.
அப்படியிருந்த நிலையில் ஒரு மீள் விளக்கத்திற்கு மாத்திரம் தங்களது வழக்கை தக்கவைத்த சட்டமாஅதிபர் வேறொரு குற்றத்திற்காக அவரை விசாரணை செய்ய முடியாது என்ற வாதத்தை முன்வைத்து நாம் ஆட்சேபனங்களை தெரிவித்தோம்.
இரு தரப்பினதும் வாதங்களை செவிமடுத்த நீதிபதி குற்றப்பகர்வு பத்திரத்தை திருத்தமுடியாது என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவு கொடுக்கப்பட்ட பின்னரே அரசு தரப்பு இதற்கு மேல் அவர் மீது சாட்சியங்களை முன்வைப்பதற்கு சாத்தியம் இல்லை வழக்கை இதோடு நிறுத்திக்கொள்கிறோம் என்று அறிவித்தனர்.
இதன்பேரில் அவர் அத்தனை குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து நீதிபதி கட்டளையிட்டார். அவர் இன்றுமுதல் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இறுதியுத்த காலத்தில் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் ஆரம்பித்து முள்ளிவாய்க்கால் வரை பலவந்தமாக ஆட்சேர்ப்பில் ஈடுபட்டது தொடர்பாக பல குற்றச்சாட்டுக்கள், கண்ணதாசன் மீது பிள்ளைகளை இழந்த பெற்றோரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.