அப்பா-மகள் இடையிலான பாசப்போராட்டத்தை பேசும் படத்தில் ஆடுகளம் முருகதாஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படத்தில் ஆதிவாசி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் முருகதாஸ். காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து, ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ‘புதுப்பேட்டை’, ‘காஞ்சிவரம்’, ‘மெளனகுரு’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதன்பிறகு ‘ஆடுகளம்’ படத்தில் தனுஷுக்கு நண்பனாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
பல ஆண்டுகள் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தாலும் ‘ஆடுகளம்’ படத்திற்கு பிறகுதான், முருகதாஸ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இதைத்தொடர்ந்து, ‘விசாரணை’, ‘96’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதேபோன்று ‘பியாலி’ என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார்.
குணச்சித்திர நடிகராக வலம் வரும் ஆடுகளம் முருகதாஸ், தற்போது புதிய படமொன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். ’ராஜாமகள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஹென்றி இயக்கி வருகிறார். தந்தை மகள் இடையிலான பாசப்போராட்டத்தையும் மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முருகதாஸுக்கு ஜோடியாக ‘கன்னிமாடம்’ புகழ் வெலினா நடித்து வருகிறார். இவர்களுடன் பக்ஸ் பகவதி, பேபி பிரிதிக்சா, ஈஸ்வர், மாஸ்டர் ஜோஸ்வா, பிரமேலதா, பெராரே, ராம், விஜய்பால உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.