முகநூலில் தனது இரகசியங்களை வெளிப்படுத்தியதாக கூறி இரண்டு நபர்கள் கடத்தப்பட்டு, சிலுவையில் ஆணியால் அறையப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, பலகொல்ல பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
இந்த சம்பவம் 25 ஆம் திகதி பதிவாகியுள்ளது.
கண்டி பொலிசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தபோது, இரண்டு பேரை சித்திரவதை செய்த 10 பேர் கொண்ட குழு தப்பியோடி விட்டது.
பூசாரியொருவரின் தலைமையிலான குண்டர்களே இந்த கொடூரத்தில் ஈடுபட்டனர்..
பொல்கொல்லவை சேர்ந்த மஞ்சுல ரத்நாயக்க (44), நவகமுவவை சேர்ந்த டி.விஜேவர்தன (36) ஆகியோர் காயமடைந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டு கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் துஷ்மந்த பூசாரி (30), கண்டியின் அம்பிட்டிய மற்றும் தம்புள்ளை பகுதிகளில் வழிபாட்டிடங்களை நடத்தி வருகிறார்.
அந்த நபர் மீது தாக்குதல், ஆயுதம் பயன்படுத்துதல் மற்றும் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும், பூசாரியும் நெருங்கிய நண்பர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பூசாரி தம்மை சித்திரவதை செய்ததாகவும், சிலுவையில் அறைந்ததாகவும் காயமடைந்தவர்கள் போலீசாருக்கு அறிக்கை அளித்திருந்தனர்.
இருப்பினும், பொலிஸ் விசாரணையின்படி, ஆயுதங்கள் தொடர்பான தகராறு மற்றும் ஒரு புதையலில் இருந்து பெறப்பட்ட தங்கம் தொடர்பான சர்ச்சை இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
காயமடைந்த மஞ்சுள மற்றும் ரத்நாயக்க ஆகியோர் 25 ஆம் திகதி பலகொல்ல பகுதியில் உள்ள துஷ்மந்தவின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். போலீஸ் விசாரணையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
பூசாரி உள்ளிட்ட ஒரு குழு மஞ்சுளவை ஒரு வானில் வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு அம்பிட்டி பகுதியில் உள்ள ஒரு மலையில் உள்ள ஒரு வழிபாட்டிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது.
ரத்நாயக்க தனது மோட்டார் சைக்கிளில் ஏறி, தனது நண்பர் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்பதைப் பார்க்க அவர்களைப் பின்தொடர்ந்தார். ரத்நாயக்கபின் தொடர்வதை அவதானித்த பூசாரி குழு, அவரையும் மடக்கிப் பிடித்து, ஆலயத்திற்கு அருகிலுள்ள காட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
பூசாரி உள்ளிட்ட குழு இரும்பு கம்பிகளைப் பயன்படுத்தி இருவரையும் கொடூரமாக தாக்கியது.
இருவரின் பற்கள், எலும்புகளை உடைத்திருந்தனர். பூசாரியும் அவரது கூட்டாளிகளும் இருவரையும் சித்திரவதை செய்து அவர்களிடமிருந்து சில ரகசிய தகவல்களைப் பெற முயன்றதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பின்னர் , இரண்டு பெரிய சிலுவைகளில் இருவரையும் அறைந்து சித்திரவதை செய்தனர்.
அவர்களை மலைப்பகுதிக்கு ஒரு குழு அழைத்து செல்வதை அவதானித்த அந்த பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பாளர், 119 அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கியிருந்தார்.
இதன்படி, அம்பிட்டி மலையில் உள்ள ஆலயம் அருகே கண்டி போலீஸ் குழு வந்துள்ளது. பொலிசார் வருவதை அவதானித்த பூசாரியும், குழுவினரும் தப்பியோடி விட்டனர். பொலிசார் செல்ல தாமதமாகியிருந்தால், இருவரும் கொல்லப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.
காயமடைந்தவர்களை பொலிசார் மீட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
இருவரையும் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகன சாரதி மற்றும் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.




