பீஹாரில் தடுப்பூசி செலுத்த சென்ற பெண் ஒருவருக்கு 5 நிமிட இடைவெளியில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் தலைநகர் பாட்னாவின் புன்புன் பிளாக்கில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சுனிலா தேவி. இவர் கடந்த 16ம் திகதி அங்குள்ள பள்ளி ஒன்றில் தடுப்பூசி போட சென்றார். அங்கு பதிவு உள்ளிட்ட வழக்கமான நடவடிக்கைகள் முடிந்த பின்னர் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, அவரது உடல்நிலையை கண்காணிக்க அருகில் உள்ள அறையில் அமர்ந்திருக்கும்படி சுனிலா தேவியை நர்சுகள் அறிவுறுத்தினர். அவர், அங்கு அமர்ந்திருந்த போது வந்த மற்றொரு செவிலியர் ஒருவர், ஏற்கனவே தடுப்பூசி போட்ட இடத்திலேயே கோாக்சின் தடுப்பூசியை செலுத்தினார். அப்போது சுனிலா தேவி ஏற்கனவே தடுப்பூசி செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்த செவிலியர், அதே கைகளில் தான் மீண்டும் தடுப்பூசி போடப்படும் என கூறிவிட்டு சென்றதாக சுனிலா தேவி தெரிவித்தார். இதனையடுத்து சுனிலா தேவியின் உடல்நிலையை கண்காணிக்க மருத்துவ குழுவினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட நர்சுகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
5 நிமிட இடைவெளியில் ஒரே பெண்ணுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.