இளவாலை பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கிருமித் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். எனினும், சில விசமிகள், அவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக தகவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
இளவாலை பகுதியை சேர்ந்த 39 வயதான இராமச்சந்திரன் ஜெகன் என்பவரே உயிரிழந்தார்.
தனது மனைவியின் தங்கையின் கணவருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் காயம் ஏற்படும் விதமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு சிறைச்சாலைக்குள் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமது சட்டத்தரணியின் ஊடாக உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு, சந்தேகநபர் தனது மனைவியிடம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில், செப்ரெம்பர் 16ஆம் திகதி சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அப்போது அவரால் நடக்க முடியாத நிலையில், அவரை சிறைக்காவலர்கள் தூக்கி வந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். நீதிமன்ற வளாகத்திலேயே அவர் இரத்த வாந்தி எடுத்ததாகவும் தெரிவித்தனர்.
பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர், உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் சிறைச்சாலைக்குள் தாக்கப்பட்டு, இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் சிலரால் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. எனினும், அவர் கிருமித் தொற்றினாலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அவரது உடலில் உள், புற காயங்கள் எதுவும் இல்லையென்பதும் மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு, குடும்பத்தினருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அவரது ஈரலும் பழுதடைந்திருந்துள்ளது.
அவருக்கு எவ்வாறு கிருமித்தொற்று ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை.
சிறைச்சாலைகள் திணைக்களத்தினர் அவருக்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவில்லையென்ற குறறச்சாட்டு எழுந்துள்ளது.




