ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு, நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. இராணுவ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இராணுவம், சிவில் நிர்வாகம் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் ஜூன் 16 முதல் இந்தத் தடை அமலுக்கு வந்துள்ளது.
இந்த உத்தரவை மீறுபவர்களின் ஸ்மார்ட்போன்கள் உடைக்கப்படும் என்றும், சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தாலிபான் அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை.
இந்தத் தடை காரணமாக அரசுப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான அலுவல் நடவடிக்கைகள் மொபைல், WhatsApp மற்றும் மின்னஞ்சல் வழியாக மேற்கொள்ளப்பட்டதால், தற்போது பல நிர்வாக செயல்முறைகள் முடங்கியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
பஞ்ச்ஷீர் மாகாண ஆளுநரும், தனது அலுவலகங்களிலும் இந்தத் தடையை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
மனித உரிமை ஆர்வலர்கள், ஆப்கானிஸ்தானில் ஸ்மார்ட்போன்கள் கல்வி பெறுதல், மனித உரிமை மீறல்களை பதிவு செய்தல், தனிப்பட்ட தகவல் பரிமாற்றம் மற்றும் தணிக்கையற்ற தகவல்களை அணுகுதல் போன்றவற்றுக்கு மக்களுக்கு கிடைத்திருந்த மிகக் குறைந்த வழிகளில் ஒன்றாக இருப்பதாகக் கூறுகின்றனர்.
2021 ஆகஸ்டில் தாலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பெண்கள், சிறுமிகள், ஊடகங்கள் மற்றும் குடிமக்கள் அமைப்புகள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிறுமிகளுக்கு மேல்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழகக் கல்வி இன்னும் மறுக்கப்பட்டுள்ளதுடன், பல பெண்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். மேலும் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மிரட்டல், கைது மற்றும் தணிக்கைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பெண்கள் உரிமை ஆர்வலர் சனம் கபிரி, “இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனம் அல்ல. அரசு அலுவலகங்களில் அதன் பயன்பாட்டைத் தடை செய்வது, நிர்வாக ஒழுங்கை பேணுவதற்காக மட்டுமல்லாமல், தகவல் மற்றும் தொடர்பாடலுக்கான அணுகலையும் கட்டுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கலாம் என்ற கவலையை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.




