கேரளாவில் 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.
கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில், 78.27% வாக்குகள் பதிவாகின. இதில் பதிவான வாக்குகள் 43 மையங்களில் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் பணியில் 15,465 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய மூன்று அணிகள் களத்தில் முக்கியமாக உள்ளன. இதிலும், நேரடிப் போட்டி என்பது ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், இடது ஜனநாயக முன்னணிக்கும் இடையேதான் இருந்து வருகிறது.
ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) உள்ளிட்ட கட்சிகளும், இடது ஜனநாயக முன்னணியில் சிபிஎம், சிபிஐ, ஷரத் பவாரின் என்சிபி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, பாரத் தர்ம ஜன சேனா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ் கூட்டணி:
இந்த தேர்தலில், ஐக்கிய ஜனநாயக முன்னணி 90க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி 63, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 22, கேரள காங்கிரஸ் 7, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 3, புரட்சிகர இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சி 1, கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) 1 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளன. ஆட்சி அமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனும் நிலையில், இக்கூட்டணி 90க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்ற உள்ளதால் இக்கூட்டணியின் ஆட்சி உறுதியாகி இருக்கிறது.
தோல்வியில் இடதுசாரிகள்:
எதிர்தரப்பில் இடது ஜனநாயக முன்னணியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களையும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 1 தொகுதியையும் கைப்பற்ற உள்ளது. இக்கூட்டணி 35 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்பதால், இம்முறை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சியாக அமர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிகாரத்தை இழந்த இடதுசாரிகள்:
கேரளாவில் பல பத்தாண்டுகளாகவே இடது ஜனநாயக முன்னணியும் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது வழக்கம். விதிவிலக்காக கடந்த 2016, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்றது. பினராயி விஜயன் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்து வருகிறார். ஜனநாயக முறைப்படி அரசு அதிகாரத்தை இடதுசாரிகள் கைப்பற்றியது கேரளாவில்தான். 1957ம் ஆண்டு இது நிகழ்ந்தது. இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் இடதுசாரிகள் முதல் முறையாக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
இந்தியாவில், மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்த இடதுசாரிகள், மேற்கு வங்கத்தையும் திரிபுராவையும் இழந்த நிலையில் கேரளாவில் மட்டும் ஆட்சியில் இருந்தனர். தற்போது அங்கும் அவர்கள் ஆட்சியை இழந்துள்ளனர். இதன்மூலம், இடதுசாரிகள் நாட்டில் எங்கும் ஆட்சியில் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
அடுத்த முதல்வர் யார்?
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை கைப்பற்ற உள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதல்வருக்கான போட்டியில், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் உள்ளனர். இதில், ரமேஷ் சென்னிதாலா முதல்வராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.



