இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தனது கட்சி எம்எல்ஏ-க்களை பாதுகாக்க மாமல்லபுரத்தில் ரகசிய ஏற்பாடுகளை தவெக செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இந்த தேர்தலில் 233 தொகுதிகளில் விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடுகிறது. எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளன.
இருப்பினும் விஜய் தரப்போ, தவெக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என பெரிதும் நம்புகிறது. இதனிடையே, சில தொகுதிகளில் வெற்றி பெறும் தவெக வேட்பாளர்களை குதிரை பேரத்தின் அடிப்படையில் இழுக்க திமுக, அதிமுக முயற்சி செய்யலாம் என விஜய் நம்புகிறார்.
இதையடுத்து, 2 நாட்களுக்கு முன்பு கட்சியின் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய விஜய், ‘வெற்றி பெற்றதும் வேறு எங்கும் செல்லாமல் எந்நேரமாக இருந்தாலும் பனையூருக்கு வந்துவிட வேண்டும். உங்களுக்காக நான் காத்திருப்பேன்’ என அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியை தவெகவினர் தயார் செய்து வைத்துள்ள தகவல் கசிந்துள்ளது. வெற்றி பெறும் வேட்பாளர்களை அங்கு தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தவெக வட்டாரங்கள் கூறியதாவது: தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாகவே இருக்கும். எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை வாக்கு சதவீதம் உயர்ந்து இருப்பதே இதற்கு சாட்சி. எனவேதான் தவெக ஆட்சியமைக்கும் என விஜய் நம்புகிறார். அதேநேரத்தில், தொங்கு சட்டப்பேரவை அமையும் பட்சத்தில் திமுக மற்றும் அதிமுக எங்களது வேட்பாளர்களைக் குதிரை பேரம் மூலம் இழுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஏற்கெனவே எடப்பாடியில் தவெக போட்டியிட முடியாதபடி சதி செய்தார்கள். அதற்கு சுயேச்சையை ஆதரித்து விஜய் பதிலடி கொடுத்தார். தற்போது தேர்தல் முடிவுகளுக்குப் பின் நடக்கக்கூடிய குதிரை பேர அரசியலை முறியடிக்க தெளிவான திட்டத்தை விஜய் வகுத்திருக்கிறார்.
அதன்படி, வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களை பாதுகாப்பாக வைக்க பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் 100 பேர் தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்களை சிதறாமல் அந்த இடத்துக்கு அழைத்து வரும் முக்கிய பொறுப்பை ஆதவ் அர்ஜுனாவிடம் விஜய் ஒப்படைத்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.



