முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இலங்கை கிரிக்கெட்டின் இடைக்காலக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் விவகாரங்களை நிர்வகிப்பதில் விக்ரமரத்னவுக்கு உதவுவதற்காக, முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை உள்ளடக்கிய 9 பேர் கொண்ட குழுவை விளையாட்டு அமைச்சு நியமித்துள்ளது.
முன்னாள் தேசிய அணித் தலைவர்களான ரொஷான் மகாநம மற்றும் குமார் சங்கக்கார ஆகியோருடன் சிதாத் வெத்தமுனி, துஷீர ரடெல்ல, அவந்தி கொலம்பகே, பிரகாஷ் ஷாஃப்டர் மற்றும் உபுல் குமாரப்பெரும, தினால் பிலிப்ஸ் ஆகியோர் இக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.
இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று விளையாட்டுத்துறை அமைச்சரிடம் தங்களது இராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.
அப்போது, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களது இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக விளையாட்டு அமைச்சு ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.
1973-ஆம் ஆண்டின் 25-ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34-ஆம் பிரிவுகளின்படி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ், இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், நிர்வாக அமைப்பிற்குள் கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும் விரைவில் ஒரு குழு நியமிக்கப்படும் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.




