கோபிசந்த் இயக்கத்தில் சீனியர் நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான பாலகிருஷ்ணா என் வழி தனி வழி என்று இளசுகளுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் என்னவோ சூப்பராக நடித்து, டான்ஸ் எல்லாம் ஆடுகிறார். ஆனால் அவருக்கு ஜோடியாக நடிக்கத் தான் நடிகைகள் தயங்குகிறார்கள்.
பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் இளம் நடிகைகளுடன் இளம் ஹீரோக்கள் நடிக்க விரும்புவது இல்லை. இதனால் பாலகிருஷ்ணா படத்திற்கு ஹீரோயின் கிடைப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. அப்படியே யாராவது ஒரு ஹீரோயின் ஒப்புக் கொண்டாலும், வேண்டாம் இது விபரீதம் என்று சக ஹீரோயின்கள் எச்சரிக்கிறார்களாம்.
இந்நிலையில் கோபிசந்த் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் பாலகிருஷ்ணா. கோபிசந்த் சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அந்த படத்தில் பாலகிருஷ்ணா இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். இரண்டு கதாபாத்திரமும் அவரை கவர்ந்துவிட்டதாம். இரண்டு கதாபாத்திரங்களுக்கான லுக் தயாராகி வருகிறதாம்.
ஒரு பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார் என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மற்றொரு பாலகிருஷ்ணாவுக்கு ஏற்ற ஜோடியை தேடிக் கொண்டிருக்கிறார்களாம். இந்த தகவல் அறிந்த சினிமா ரசிகர்களோ, அய்யோ ஸ்ருதி, பாலய்யாவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டாம். அதன் பிறகு உங்களை பிற ஹீரோக்கள் ஒதுக்கிவிடுவார்கள்.
அவர் உங்கள் அப்பா வயதுக்காரர். விஷ பரீட்சை வேண்டாம் ஸ்ருதி என எச்சரித்துள்ளனர்.
முன்னதாக கோபிசந்த் இயக்கத்தில் பலுப்பு, கிராக் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ருதி. அந்த பழக்கத்தில் தான் ஸ்ருதியிடம் கோபிசந்த் தேட்க, அவரும் சரி என்று சொல்லியிருக்கிறாராம். பாலகிருஷ்ணா, ஸ்ருதி ஹாசன் நடிக்கவிருக்கும் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
படத்தை அடுத்த ஆண்டு தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஸ்ருதி ஹாசன் தற்போது பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எஃப். படம் புகழ் பிரசாந்த் நீல் இயக்குவதால் சலார் படம் மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது.