“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

Date:

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படும். ஆகவே, இவற்றை வடக்கு மாகாண ஆளுநர் புரிந்து கொள்வதில்லை. அவரைப் பிழையாக வழிநடத்துகின்றார்கள் என பதவி வறிதாக்கப்பட்ட சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளரும் உறுப்பினருமான ஞானப்பிரகாசம் கிஷோர் தெரிவித்தார்.
சாவகச்சேரி நகரசபை தொடர்பான தீர்ப்பு யாழ்ப்பாணமேல்  நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் நேரடியாக அணுகக்கூடியது உள்ளூராட்சி மன்றங்களைத்தான் ஆளுநர் தெளிவாகச் சொல்லுகின்றார்,
நாங்கள் அவர்களுடைய பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று கூறுகின்றார். ஆகவே, எங்களிடம் வர்த்தகர்கள் வந்தார்கள். அவர்களுடைய பிரச்சினையைக் கொண்டு வந்தார்கள்.
இந்த குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படும். ஆகவே, இவற்றை ஆளுநர் புரிந்து கொள்வதில்லை. அவரைப் பிழையாக வழிநடத்துகின்றார்கள்.
அரச கட்டிடங்களுக்கும் குடிபுகு சான்றிதழ் தேவை என்ற விடயத்தை ஆளுநர் தெரிவிக்கின்றார்.
பழைய பூங்கா வளாகத்திலே இருக்கக்கூடிய இந்த வடமாகாண ஆளுநருடைய செயலகத்திற்கு கட்டிட அனுமதி இருக்கின்றதா? அதற்கு குடிபுகு சான்றிதழ் இருக்கின்றதா? நாங்கள் இங்கே இதை பகிரங்க வெளியிலே சொல்லுகின்றபொழுது அவைகளை அவர்கள் தயார்படுத்தலாம். ஆனால் பழைய பூங்கா வளாகம் என்பது ஒரு தேசிய மரபுரிமைச் சின்னமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வளாகம். அங்கே அமைக்கப்பட்டிருக்கக்கூடிய அனைத்துப் பெரும்பாலான கட்டிடங்களுக்கும் எந்தவிதமான அனுமதியும் இல்லை என்று சொல்லி நாங்கள் அறிகின்றோம். ஆகவே, இவற்றை ஆளுநர் பகிரங்கப்படுத்த முடியுமா? இந்தச் சவாலை அவர் ஏற்றுக்கொள்ள முடியுமா?
ஆகவே, கௌரவ ஆளுநர் அவர்களே, நீங்கள் இருக்கின்ற அந்த ஆளுநர் செயலகத்திற்கான குடிபுகு சான்றிதழ், அதனை அதனோடு இணைந்து அதற்கான அனுமதி, கட்டிட அனுமதி இவற்றை நீங்கள் தர வேண்டும். நாங்கள் சொல்லுகின்றோம், நீங்கள் குடிபுகு சான்றிதழ் இல்லையென்று சொன்னால் அவற்றை உடனடியாக மூடுங்கள்.
ஆயிரக்கணக்கான அரச அதிகாரிகள் பணியாற்றக்கூடிய, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்லக்கூடிய இந்த மாவட்டச் செயலகத்திற்கு உரிய குடிபுகு சான்றிதழ் இருக்கின்றதா? 2016 க்கு பிற்பாடுதான் இந்த மண்ணிலே குடிபுகு சான்றிதழ் வடமாகாண சபையால் அவசியம் என்றொரு விடயம் கொண்டுவரப்பட்டது.
யுத்தம் நிறைவுபெற்று, 2015 வரைக்கும் இந்த நாட்டிலே சிவில் நிர்வாகங்கள் சீராக இயங்கவில்லை. உள்ளூராட்சி மன்றங்கள் சீராக இயங்கவில்லை.
ஆகவே, இன்றைக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாடு கட்டப்பட்ட மாவட்டச் செயலகத்திற்கு குடிபுகு சான்றிதழ் இருக்கின்றதா? இந்த வடமாகாணத்திலே இருக்கக்கூடிய பாரம்பரிய அரச திணைக்களங்களினுடைய கட்டிடங்களுக்கு குடிபுகு சான்றிதழ் இருக்கின்றதா? குடிபுகு சான்றிதழ் அந்த நேரத்திலே நடைமுறையிலே இல்லை. அதற்காக நாங்கள் ஒரு அறிவுறுத்தலை வழங்க முடியுமா, உடனடியாக மாவட்டச் செயலகத்தை மூடி உரிய நடைமுறைகளைப் பின்பற்றி குடிபுகு சான்றிதழைப் பெற்ற பிற்பாடுதான் அதை மீண்டும் திறக்க வேண்டும், அதுவரை மூடுங்கள் என்று சொல்லி ஆளுநர் உத்தரவிட முடியுமா? அவ்வாறான ஒரு நிலைதான் எங்களுடைய சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள்ளே இடம்பெற்றது.
அங்கே 2010 க்கு முன்னர் கட்டப்பட்ட பாரிய கட்டிடங்கள் இருக்கின்றன. அவற்றுக்குக் கட்டிட அனுமதியோ குடிபுகு சான்றிதழோ இல்லை, அது அவர்களுடைய தவறில்லை, ஏனென்று சொன்னால் அவர்கள் அதை கட்டிய காலத்திலும் சரி, அதற்குப் பிற்பாடும் சரி அப்படியான ஒரு நடைமுறை இல்லை. ஆகவே, அந்தக்கட்டிடங்களுக்கு இனி குடிபுகு சான்றிதழ் பெற்றுக்கொள்ளவும் முடியாது.
இவற்றை நாங்கள் சொல்லப் போனால், நாங்கள் அனுப்பிய அறிவுறுத்தலைத் தூக்கி வீசுவதா? எங்களுடைய அறிவுறுத்தலை உதாசீனம் செய்வதா என்ற கோணத்திலே அவர்கள் தங்கள், தனிப்பட்ட பகையைத்தான் அவர்கள் இங்கே பாராட்டுகின்றார்கள்.
பதவிகள் வரலாம் போகலாம். இந்த மண்ணிலே நாங்கள் பதவிகள் இல்லாமலும் நின்று கொண்டிருந்தோம்.
ஆனால் அந்த மண்ணோடும் மக்களோடும் தான் நின்றேன். இன்றைக்கும் நான் பதவியேற்று ஒரு வருடங்கள் இல்லை, என்னுடைய பதவி பறிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, நாங்கள் வெளியிலே நின்றும் கூட நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் எங்களுக்குரிய இந்த பதவி பறிப்புக்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்திலே நல்ல தீர்ப்பைப் பெறுவோம். இல்லையென்று சொன்னால் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடைய ஒவ்வொருவருடைய வாயும் கட்டப்படும்.
ஆகவே, இதற்குத்தான் நாங்கள் இன்றைக்கு நீதிமன்றத்திலே போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்தப்போராட்டம் சளைத்துவிடப் போவதில்லை. இது தனிப்பட்ட எனக்கான போராட்டம் அல்ல. வடமாகாணத்தினுடைய ஒவ்வொரு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்காகவும்தான் நான் இன்றைக்குப் போராடிக் கொண்டிருக்கின்றேன்.
உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுடைய குரல்வளையை நசுக்குவதற்காக வடமாகாண ஆளுநர் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தோடு சேர்ந்து செய்கின்ற அடாவடிக்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்திலே நாங்கள் ஒரு நல்ல தீர்ப்பைப் பெற்றுக் கொள்வோம்.
ஆகவே, நாங்கள் அஞ்சப்போவதில்லை. வடமாகாண கௌரவ ஆளுநர் அவர்களே, நான் விடுகின்ற இந்தச் சவாலுக்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா? இன்றைக்கு பழைய பூங்கா வளாகத்திலே உள்ள அனைத்துக் கட்டிடங்களுக்குமான அனுமதிகள், கட்டிட அனுமதிகள், குடிபுகு சான்றிதழை உடனடியாக நீங்கள் இந்த வடமாகாண மக்களுக்குப் பகிரங்கப்படுத்துங்கள் – என்றார்.
மேலும் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  ஞானப்பிரகாசம் கிஷோர்தெரிவித்தார்.
spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்