உள்ளூராட்சி தேர்தலில் அதிக ஆசனத்தை பெற்ற சபைகளில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதென்றும், அங்கு தவிசாளர் வேட்பாளர்களை நிறுத்துவதென்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், அதிக ஆசனத்தை பெறாத வல்வெட்டித்துறை நகரசபையிலும் தமது முதல்வர் வேட்பாளரை நிறுத்துவதென தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது.
இன்று (10) வவுனியாவில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் நடந்தது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் தான் நடத்தும் பேச்சுவார்த்தை விவகாரங்களை எம்.ஏ.சுமந்திரன் கூட்டத்தில் தெரிவித்தார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு விரைவில் தெரிய வருமென்றார்.
இதேவேளை, தமிழ் அரசு கட்சி அதிக ஆசனங்களை கைப்பற்றிய சபைகளில் தவிசாளர் வேட்பாளர்களை நிறுத்துவதென்றும், ஏனைய தமிழ் கட்சிகளுடன் இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஒரு சபையில் பல கட்சிகளின் ஆதரவை பெற வேண்டியிருக்கும் சந்தர்ப்பத்தில், ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமான நிபந்தனையை முன்வைத்தால் அதை நிறைவேற்ற முடியாது என்பதாலேயே நிபந்தனையற்ற ஆதரவை கோருவதென தீர்மானிக்கப்பட்டது.
எனினும், வல்வெட்டித்துறை நகரசபையில் இலங்கை தமிழ் அரசு கட்சி அதிக ஆசனங்களை கைப்பற்றவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியே அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்தது.
ஆயினும், அங்கும் முதல்வர் வேட்பாளரை நிறுத்த தீர்மானிக்கப்பட்டது.
உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார சமயத்தில், எதிர்க்கட்சிகளை குரங்குகள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் க.சுகாஸ் கூறியதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகரசபைகள் தொடர்பில் தெளிவான தீர்மானம் இன்று எடுக்கப்படவில்லை. களநிலவரத்திற்கு ஏற்ப முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.




