மட்டக்களப்பில் காதலனுக்காக தனது தாயின் எட்டரை பவுன் தாலிக்கொடியை திருடி அதனை ஈடு வைத்து 14 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்து விட்டு அதை அவர்களது வீட்டுக்கு வரும் உறவினரான பெண் திருடியதாக கைது செய்ய வைத்து நாடகமாடிய நிலையில் 4 மாதங்களின் பின்னர் தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றும் 22 வயது யுவதியான மகளை இன்று திங்கட்கிழமை (23) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் நிலையத்தின் கீழ் உள்ள பிரதேசம் ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஜூன் மாதம் 28ம் திகதி வீட்டில் இருந்த தாலிக் கொடி திருட்டுப் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனை தொடர்ந்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த வீட்டிற்கு அடிக்கடி வரும் உறவினரான பெண் ஒருவரை சந்தேகிப்பதாக தாலிக்கொடியை திருட்டுக் கொடுத்தவர்கள் பொலிசாரிடம் முறையிட்டதையடுத்து பொலிசார் அந்த பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவரிடம் இருந்து திருட்டுப் பொருளை மீட்கப்படாத நிலையில் அவரை சந்தேகத்தின் பேரில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் அவர் பிணையில் வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியாக இருந்தவர் இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில் அதன் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா நியமிக்கப்பட்டதையடுத்து இந்த தாலி கொடி திருட்டு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இதன்போது குறித்த வீட்டின் உரிமையாளரின் மகளான தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றி வரும் 22 வயதுடையவர் அடையாள அட்டை இலக்கத்தை பெற்று நீதிமன்ற அனுமதி பெற்று வங்கிகளில் விசாரணையின் போது 28 திகதி திருட்டுப் போன தாலிக் கொடியை 30 ம் திகதி தனியார் வங்கி ஒன்றில் அவரது அடையாள அட்டையை கொடுத்து 14 இலட்சம் ரூபாவுக்கு ஈடு வைத்து பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார் என கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த யுவதியை இன்று திங்கட்கிழமை கைது செய்து விசாரணையின் போது காதலனின் பண தேவைக்காக தாயாரின் தாலிக் கொடியை திருடி ஈடுவைத்து அன்றைய தினம் காந்தி பூங்காவில் வைத்து காதலனிடம் 14 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
குறித்த காதலன் தொடர்பான விசாரணை முன்னெடுத்து வரும் நிலையில் கைது செய்யப்பட்டவரை யுவதியை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 7 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
-கனகராஜா சரவணன்-




